என்னை தொட்டவர்கள் !

31 டிசம்பர், 2010

தினமணியின் வணிக மோசடி!

                                                கலீல் ,வீரசோழன்


  தினமணி இன்று 8 ரூபாய்! தினமணி என்ற பெயரையும் ,சில முன்னணி நிறுவனங்களின் விளம்பரத்தையும் காலண்டர் என்ற பெயரில் நமது கடை மற்றும் வீட்டில் இருந்தபடி வருடம் 365 நாளும் நாமே விளம்பரம் செய்ய நாம் கொடுக்கும் விலைதான் இன்றைய விலை ரூபாய் 8 ! (30 .12 .2010 ) இதை நேற்று முன் அறிவிப்பும் செய்யவில்லை இதைதான் நாம் மோசடி என்று குறிப்பிடுகின்றோம் .3 ரூபாய் தினமணி 50 பைசா உயர்வதற்கு முன் அறிவிப்பு செய்யும் ஆசிரியர் சுயநல விளம்பர நோக்கத்திற்காக 8 நிர்ணயம் செய்ததை முன் அறிவிப்பு செய்ய வேண்டும் , அப்படி செய்தால் விருப்பம் இல்லாதவர்கள் வாங்காமல் இருப்பார்கள் . அந்த இழப்பை தவிர்க்க அறிவிப்பில்லாமல் காலண்டர் விற்பனை செய்வது மிகப்பெரிய மோசடி ! இன்னும் ஒரு மோசடி இருக்கிறது அது யாருக்கும் தெரியாது , அதாவது திருமண , அரசியல் விழா விளம்பரம் முழு பக்க விளம்பரம் கிடைத்தால் அந்த விளம்பரத்தை போட்டு  அந்த அளவு செய்தியை முழுங்கி விடுவார்கள் 12 பக்கதுக்கு மேல் தினமணி வந்த சரித்திரம் இல்லை .கொடுக்கும் காசுக்கு செய்தி இல்லை ! எங்கோ நடக்கும் திருமண ,அரசியல் விழா பற்றி கிராமத்தின் கோடியில் அமர்ந்து படிக்கும் சாமானியனுக்கு என்ன அக்கறை ! நாம் விளம்பரம் போட தடை செய்ய வில்லை , விளம்பரம் கிடைத்தால் செய்தியை குறைக்காதே பக்கத்தை கூட்டு என்கிறோம் . 
வெங்காய விலை யாரால் உயர்கிறது ? என்று ஆராய்ச்சி செய்தும், நாடாளுமன்றம் முடங்கியதால் 100 கோடிக்கு மேல் நஷ்டம் என்று கவலை பட்டும் தலையங்கம் எழுதும் ஆசிரியர் சாமாநியனிடம் 8 கொள்ளை அடிப்பது என்ன நியாயம் ? காலண்டர் மூலம் வந்த லாபத்தால் அதை இலவசமாகவே கொடுக்கலாமே ! நாமும் இந்த கடிதமும் எழுத அவசியம் இருக்காது ! சரி சமாதானமாக காலண்டேரை வாங்கி கொள்வோம் என்றால் அதிலும் சிக்கல் ! என்ன என்றால் நான் ஒருஇஸ்லாமியன் காலண்டரில் இஸ்லாமிய வருட கணக்கு இல்லை இதை நான் எப்படி ஏற்பது? ஆக இதை எதிர்த்து  வாசகர்கள்  சட்ட நடவடிக்கை எடுக்க விழிப்புணர்வு பெறவேண்டும் .

11 டிசம்பர், 2010

அமெரிக்காவில் மிக வேகமாக வளரும் அரபி மொழி

அமெரிக்காவில் மிக வேகமாக வளரும் அந்நிய மொழிகளில் அரபி மொழி முன்னணியில் உள்ளது. சென்ற கல்வி ஆண்டில் அதிகமான அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் அரபி மொழிக்கான வகுப்பில் இணைந்துள்ளனர். கடந்த 2006 ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 46 சதவிகித வளர்ச்சியாகும் என்று ஓர் ஆய்வு அறிக்கை கூறுகின்றது.

ஆங்கிலத்தை தொடர்ந்து அதிகம் படிக்கும் மொழிகளின் பட்டியலில் லத்தின் மற்றும் ரஷ்ய மொழிகளை பின்னுக்கு தள்ளி எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியல் 1958 ம் ஆண்டிலிருந்து வெளியிடப்படும் நவீன மொழிகளுக்கான அமைப்பு Modern Language Association (MLA) வெளியிடும்  22 வது பட்டியலாகும்.

மேலும் இந்த பட்டியலில் கொரியன் 19 சதவிகிதமும், சைனீஸ் 18.2  சதவிகிதமும், அமெரிக்க சைகை மொழி 16.4 சதவிகிதமும் போர்சுகீசிய மொழி 11 சதவிகிதமும் வளர்ச்சியடைந்து முக்கிய இடத்தை பிடித்துள்ளன.

8,65,000 மாணவர்கள் சேர்க்கையை கொண்டு ஸ்பானிஷ் மொழி முன்னணியில் உள்ளது, 2006 ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 5 சதவிகித வளர்ச்சியாகும், தொடர்ந்து பிரஞ்சு மொழி 2,16,000 சேர்க்கையுடன் 5 சதவிகிதமும்  ஜெர்மன் மொழி 96,000 சேர்க்கையுடன் 2 சதவிகிதமும்  வளர்ச்சியடைந்துள்ளன

1968  ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் கலவரம் நடந்த காலகட்டத்தில் பிரஞ்சு மொழி அதன் உச்சகட்டமாக 3,88,000 மாணவர்கள் சேர்க்கையை கொண்டிருந்தது  ஆனால் 1980 ம் வருடம் 2,48,000 ஆக குறைந்தது. அதே போல் ரஷ்ய மொழி 1980 ம் ஆண்டு  24,000 எண்ணிகையில் இருந்து 1990 ம் ஆண்டு 45,000 ஆக அதிகரித்தது. பின் சோவியத் யூனியன் உடைந்த 5 வருட காலத்திற்குள் 25,000 ஆக குறைந்தது.

1998 ம் ஆண்டு 5,500 ஆக இருந்த அரபி மொழியின் சேர்க்கை 2002 ம் ஆண்டு  ஈராக் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு பின் 10,584 ஆக உயர்ந்தது. இப்போது 2010-ல் இந்த எண்ணிக்கை 35,000 ஆக உயர்ந்து உள்ளது.

இந்த ஆய்வறிக்கை  2,514 அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆய்வு நடத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.  இது அமெரிக்காவின் உயர் கல்வி நிறுவனங்களில் 99  சதவிகிதமாகும்.

9 டிசம்பர், 2010

மானம்கெட்ட மத்திய அரசால் நூறு கோடி நஷ்டம், நாடாளுமன்ற முடக்கம் .

தொடர்ந்து 18 நாள்களாக நாடாளுமன்றம் செயல்படவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்தான். நாடாளுமன்றம் செயல்படவில்லை என்றால், குடியரசு காயப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.
கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக, ஊடகங்களில் "ஸ்பெக்ட்ரம்' முறைகேடுகளைப் பற்றித் தொடர்ந்து கண்டனம் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் அதைக் கொஞ்சம்கூட சட்டை செய்யாமல் மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்தியதன் விளைவுதான் இப்போது பிரச்னை பூதாகரமாக மாறி, பிரதமரையே கபளீகரம் செய்துவிடும் அளவுக்கு வளர்ந்துவிட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்காமல் விட்டிருந்தால், முழுப் பூசணிக்காயும் நிச்சயமாகச் சோற்றில் மறைக்கப்பட்டிருக்கும்.
பிரச்னை வெளியானவுடன், வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயல்படும் அரசாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? சம்பந்தப்பட்ட அமைச்சரைப் பதவி விலகச் சொல்லி, புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். ஏன், ஒரு விசாரணைக் கமிஷனேகூட அமைத்திருக்கலாமே?
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இரண்டாவது தடவையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது முதலே, காங்கிரஸ் தலைமைக்குத் தங்களை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்கிற இறுமாப்பும், எதிர்க்கட்சிகள் கைகோத்துவிடாது என்கிற அசட்டுத் தைரியமும் நிறையவே ஏற்பட்டுவிட்டது. "ஸ்பெக்ட்ரம்' பிரச்னையை ஒரு பொருட்டாகவே மத்திய அரசு கருதவில்லை என்பதுடன் பிரச்னைக்குரிய அமைச்சகத்தின் செயலராக இருந்தவரை, ஏற்கெனவே அவர் மீது மற்றொரு லஞ்ச ஊழல் புகார் விசாரணை முடிவடையாத நிலையில், தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக நியமித்ததே, அதுதான் ஆணவத்தின் உச்சகட்டம்.
இப்போது, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்குகின்றன. செயல்படவிடாமல் தடுக்கின்றன என்று ஆளும்கட்சி கூறுவதில் அர்த்தமே இருப்பதாகத் தெரியவில்லை. அரசு என்னதான் விரும்புகிறது? "ஸ்பெக்ட்ரம்' ஊழல் பற்றி எதிர்க்கட்சிகள் எதுவுமே பேசாமல், பிரதமரைப் போல மெளனம் சாதிக்க வேண்டும் என்கிறதா? இல்லை, தினமும் நாடாளுமன்றத்துக்கு வந்து நாற்காலிகளில் தூங்கிவிட்டுப் போகவேண்டும் என்று நினைக்கிறதா?
கடந்த நவம்பர் 9 முதல் தொடங்கிய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இதுவரை ஒரு நாள்கூட செயல்படவில்லை என்பது உண்மை. இந்த நாடாளுமன்றப் புறக்கணிப்பால், அரசுக்கு ஏறத்தாழ  100 கோடி நஷ்டம் என்பதும் உண்மை. ஆனால், இதற்கு யார் பொறுப்பு, எதிர்க்கட்சிகளா, ஆளும் கட்சியா?
நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது பெரும்பான்மையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பெரும்பான்மை இருப்பதால் அரசு எதை வேண்டுமானாலும் செய்யலாம். அதன் செயல்பாடுகள் கேள்விக்கு அப்பாற்பட்டது என்றால் நாடாளுமன்றமும், சட்டப்பேரவைகளும் தேவையில்லையே. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி, வெற்றி பெற்ற கட்சியிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு, ஆண்டுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையிலோ, ஆளுநர் மாளிகைகளிலோ ஒன்றுகூடி, விருந்துண்டு, குசலம் விசாரித்துப் பிரியலாமே!
அவையில் பெரும்பான்மை இருப்பது ஆட்சியில் அமரவும், நிர்வாகத்தை நடத்தவும்தானே தவிர, அரசை நடத்துவது நாடாளுமன்றம்தான். நாடாளுமன்றம் என்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தனை உறுப்பினர்களையும் உள்ளடக்கியதாக இருப்பதுதான். நாடாளுமன்றத்தை, பிரச்னைகள் இல்லாமல் எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு மதிப்புக் கொடுத்து நடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பு ஆளும்கட்சிக்குத் தானே தவிர, எதிர்க்கட்சிகளுடைய கடமை அதுவல்ல. அதனால்தான், அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரத்துக்காக ஓர் அமைச்சர் நியமிக்கப்படுகிறார்.
எதிர்க்கட்சிகள் பிரச்னையை அரசியலாக்கப் பார்க்கின்றன என்பது ஆளும்கட்சித் தரப்பின் குற்றச்சாட்டு. அதில் என்ன தவறு இருக்க முடியும்? அரசியல் கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயல்வதில் வியப்பென்ன இருக்கிறது? ஆளும்கட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்த முயற்சிப்பதும், ஆளும்கட்சி தவறுகளைத் திருத்தாமல் அடம் பிடித்தால் அதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதும் தானே எதிர்க்கட்சிகளின் கடமை!
தலைமைத் தணிக்கை ஆணையரின் அறிக்கையை நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுதான் விசாரிக்குமே, பிறகு எதற்காக ஒரு நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. பொதுக் கணக்குக் குழு என்பது "சி.ஏ.ஜி.' அறிக்கையில் கூறப்படும் எல்லா துறைகளின் அறிக்கையையும் பொதுவாக, மேலெழுந்தவாரியாக ஆய்வு செய்யும் குழு. ராணுவம், ரயில்வே, பொதுத்துறை நிறுவனங்கள், உளவு என்று எல்லா அமைச்சகங்களின் நிதி ஒதுக்கீடு தொடர்பான கணக்குகளையும் தணிக்கை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதுதான் தணிக்கை ஆணையத்தின் பணி. சி.ஏ.ஜி. அறிக்கை என்பது மேலோட்டமானதுதான் என்று அரசுத் தரப்பே கூறும்போது, அதன் அடிப்படையிலான நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் விசாரணைக்கு என்ன பலன் ஏற்பட்டுவிடப் போகிறது?
நாடாளுமன்றக் கூட்டுக் குழு என்பது, ஒரு குறிப்பிட்ட விவகாரத்தில், குற்றச்சாட்டின், பிரச்னையின் எல்லா அம்சங்களையும் தீர விசாரிக்கும் அமைப்பு. இந்தஅமைப்பு பிரதமர் தொடங்கி, சோனியா காந்தி உள்ளிட்ட, ஏன் தனது கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவுக்காக நாள்தோறும் ஆதரவு அறிக்கை வெளியிடும் தமிழக முதல்வர் உள்பட, நீரா ராடியா, ரத்தன் டாடா, அனில் அம்பானி என்று ஒருவர் விடாமல் விசாரிக்கும் அதிகாரம் படைத்த அமைப்பு. இது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்குத் தெரியாதா என்ன?
நாடாளுமன்றக் கூட்டுக் குழு பிரதமரை விசாரணைக்கு அழைத்து அவமானப்படுத்துமே என்கிற காங்கிரஸாரின் கேள்விக்கு இதுதான் பதில் - பிரதமர் என்ன கடவுளா? அமெரிக்க அதிபரும், பிரிட்டிஷ் பிரதமரும் அந்த நாட்டு நாடாளுமன்றங்களால் விசாரிக்கப்படும்போது, மன்மோகன் சிங்கை இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழு விசாரித்தால் என்ன தவறு? அவருக்குத்தான் இதற்கு முன் இரண்டு "ஜே.பி.சி.'க்களால் விசாரணை செய்யப்பட்ட அனுபவம் உண்டே!
நாடாளுமன்றம் நடக்காமல் இருப்பதற்கு அரசுதான் காரணம். நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க அரசுத் தரப்பு ஏன் பயப்பட வேண்டும் என்பதுதான் கேள்வி!

7 டிசம்பர், 2010

பாபர் மசூதி நினைவு நாள்!

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி சங்பரிவார் இயக்கத்தினரால் இடிக்கப்பட்ட நாள். பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 18ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

திங்கள் கிழமை காலையில் நாடாளுமன்றம் கூடியதும், ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைக்கக் கோரி 17ஆவது நாளாக பாஜக, கம்யூனிஸ்டுகள், அதிமுக, சமாஜ்வாதி கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

பாபர் மசூதி இடிப்பில் தொடர்புடையவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சியைச் சார்ந்த ஷஃபீகுர் ரஹ்மான் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ஹைதராபாத்தில் முழு அடைப்புக்கு முஸ்லிம் அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. இதனைத் தொடர்ந்து சார்மினார் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. ஹைதராபாத்தின் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளான லாட் பஜார், குல்ஜார் ஹவுஜ், பதேர்கட்டி மற்றும் மதீனா ஆகிய இடங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. மலகாபேட், நம்பள்ளி, மெஹ்திபட்னம் மற்றும் தோலி செளகி ஆகிய பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் தமுமுகவின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

கோயம்புத்தூரில் வெற்றி ஊர்வலம் என்ற பெயரில் ஊர்வலம் செல்ல முயன்ற இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர். சென்னையிலும் இதுபோன்ற ஊர்வலத்தை அனுமதியின்றி நடத்த முயன்ற சுமார் 80 இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்

4 டிசம்பர், 2010

நாடாளுமன்ற முட்டுக்கட்டை: ரூ.95 கோடி மக்கள் வரிப்பணம் விரயம்!

ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சியினரின் பிடிவாதப்போக்கினால் தொடர்ந்து 16வது நாளாக நாடாளுமன்றம் செயல்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் மக்கள் வரிப்பணம் சுமார் ரூ.95 கோடி அளவுக்கு வீணாகியுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் காமன்வெல்த் முறைகேடு, மும்பை ஆதர்ஷ் முறைகேடு, ஸ்பெக்ட்ரம் முறைகேடு என எதிர்கட்சிகள் அடுத்தடுத்து பிரச்சனைகளை கிளப்பி வருகின்றன. இதனால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்து ஒரு நாள் கூட நாடாளுமன்றம் முறையாக செயல்படவில்லை. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் மட்டும் 16வது நாளாக நாடாளுமன்றம் செயல்படாமல் முடக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக் கோரி எதிர்கட்சிகள் எழுப்பும் கோரிக்கையை அரசு ஏற்காததால் இந்நிலை தொடர்கின்றது. சபாநாயகரும் மத்திய அரசும் பலச்சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இன்றும் நாடாளுமன்றம் கூடியவுடன் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இது போன்று அவை அலுவல்கள் நடைபெறாமலேயே மக்கள் வரிப்பணம் சுமார் ரூ.95 கோடி விரயமாகியுள்ளது தெரியவந்துள்ளது. எதிர்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டாலும் உறுப்பினர்கள் அவைக்கு வந்ததாகக் கணக்கிடப்பட்டு அன்றாடப்பணிகள் வழங்கப்படுகின்றன. இது தவிர சபாநாயகர், மக்களைவை மற்றும் மாநிலங்களவைச் செயலாளர்கள், ஊழியர்கள் ஊதியம் என ரூ.95 கோடி செலவாகியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் மக்கள் வரிப்பணம் மேலும் விரயமாகுமே தவிர மக்கள் பிரச்சனைகள் குறித்து உருப்படியான விவாதம் எதுவும் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.