என்னை தொட்டவர்கள் !

2 நவம்பர், 2013

சென்னை மக்கா மஜீத் இமாம் தமிழக அரசுக்கு கண்டனம் !

இந்தவாரம் ஜும்மா  மேடையில் மௌலானா சம்சுதீன் அவர்கள் கூறியதாவது. இஸ்லாமியர்கள் குற்றவாளிகளா இல்லையா என்பது வேறுவிசயம்,ஆனால் அவர்களை கைது செய்தாலே பரிசு என்று அரசு அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட போலிஸ் பக்ருதீன் விசயதில் மிகப்பெரிய குழப்பம் நீடிக்கிறது ஆனால் அதை தமிழக அரசு விளக்கவில்லை.

உ.பி மௌலானாவுக்கு என்ன ஆனது ?

கடந்த வாரம் உத்திர பிரதேச மதகுரு மெளலானா  கல்பே சாதிக் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் மோடி அவர்கள் முஸ்லிம் விரோத போக்கை மாற்றிகொண்டால் நான் குஜராத் கலவரங்களை மறந்துவிடுவதாக கூறியுள்ளார்.தண்டிக்கும் அதிகாரம் படைத்தவன் மன்னிபானால் அவனை அல்லாஹ் மிகவும் பிரியபடுகிறான்.மௌலான அவர்கள் மோடியை மன்னிக்கவும் ,மோடியின் கலவரங்களை மறக்கவும் தயாரானால் மௌலானா அவர்கள் குஜராத்தில் எந்தவகையில் பாதிக்கபட்டார்கள்? உண்மையில் மோடியை மன்னிக்க கடமைப்பட்டவர்கள் குஜராத் கலவரத்தால் விதவையானவர்கள் ,அனாதையானவர்கள் ,சொத்துக்களை இழந்தவர்கள்தான் மன்னிக்க தகுதிபடைத்தவர்கள் அவர்கள் மன்னிப்பார்களா ?

31 அக்டோபர், 2013



ந்தியாவிலிருந்து ஒரு மாணவர் தனது மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்ல முடியும்.​
தொழிலதிபர் தனது வர்த்தக நோக்கத்திற்காக அமெரிக்கா செல்ல முடியும். விளையாட்டு வீரர் நாட்டின் பெருமையை நிலைநாட்ட அமெரிக்கா செல்ல முடியும்.​ஆனால் மூன்றாவது முறையாக குஜராத் முதல்வராக இருக்கும், ​இன்னும் பாஜகவின் ​பிரதம​ர் வேட்பாள​ராக ​ஆர்.எஸ்.எஸ்ஸால் ​முன்மொழியப்படும் மோடி அவர்கள் அமெரிக்கா செல்ல முடியாது.
நாங்கள் அவரை அனுமதிக்க முடியாது என்று அமெரிக்கா ஒருமுறை அல்ல பலமுறை திட்டவட்டமாகக் கூறி வருகிறது. கடைசியாக இரண்டு நாட்களுக்கு முன்புகூட ​மீண்டும் அதை உறுதிபடுத்தியதை நான் தமிழ் தொலைக்காட்சி செய்தியில் கேட்டேன். ஆனால் அந்தச் செய்தியை மறுநாள் எந்தத் தமிழ் தினசரியும் வெளியிடவில்லை. அது மோடி மீதான பயத்தினாலா அல்லது மோடியின் விளம்பர கம்பெனி தந்த பணத்துக்கு விலைபோனதாலா என்பது தெரியவில்லை. நாம் கேட்டால், அது பத்திரிகை சுதந்திரம் என்பார்கள்.
சரி, இப்போது விசயத்துக்கு வருவோம். மோடியை அமெரிக்கா ஏன் அனுமதிக்கவில்லை? இதற்கு நாம் எவ்வளவு முயன்றாலும் ஒரு வரியில் பதில் சொல்ல முடியாது. கொஞ்சம் விரிவாக அலச வேண்டியுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் பிரபல இந்தி நடிகர் சல்மான்கானுக்கு பிரிட்டன் விசா மறுக்கப்பட்டது. அதற்கான காரணம், ​சாலை விபத்தில் ஒருவர் உயிரிழக்க காரணமாக சல்மான்கான் இருந்தார். அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அது எந்த நேரமும் இறுதிக் கட்டத்தை அடையலாம். இப்படி ஒரு குற்றப் பின்னணியில் இருக்கிறார். மேலும் சமீபத்தில் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய்தத் 3.5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அனுபவிக்கின்றார். இந்தப் பீதியில் சல்மான்கான் இருக்கலாம். இந்தக் காரணங்களால் அவர் பிரிட்டனில் தலைமறைவாகிவிட்டால், குற்றவாளிக்குத் தஞ்சம் அளிப்பதாக இந்தியா குற்றம் சாட்டும். இதனால் இருநாட்டின் சகஜ நிலை பாதிக்கும் என்ற தொலைநோக்கு சிந்தனையே சல்மான்கானுக்கு விசா மறுப்பு.
இதைப்போன்று பல மடங்கு தீவிரமான பிரச்​ச​னை மோடியுடையது. ஆட்சி அதிகாரத்தை​ப்​ பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை நோக்கி கொலைவெறித் தாக்குதல் நடத்தி பல ஆயிரம் பேரை​க்​ கொன்ற, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருள்க​ளைச்​ சூறையாடி துவம்சம் செய்த மெகா குற்றப் பின்னணி மோடியுடையது. இப்படியிருக்க, அமெரிக்கா ஒரு சுதந்திர ​ஜனநாயக நாடு, தனது நாட்டின் பாதுகாப்பு கருதி எதையும் செய்ய அதற்கு உரிமை உள்ளது. இந்திய ஜனாதிபதியையே பாதுகாப்புக் கருதி சோதனை என்ற நோக்கில் அசிங்கப்படுத்தியதை இந்தியா என்றும் மறக்காது. அப்படிப்பட்ட அமெரிக்கா, ஒரு மெகா குற்றப் பின்னணி கொண்ட மனிதரை அனுமதிப்பதால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டால் என்ற தொலைநோக்கு சிந்தனையே மோடிக்கான விசா மறுப்பு.
இந்த மோடி சிறந்த நிர்வாகி, பேச்சாளர் என்றெல்லாம் சொல்லப்படுகின்றது. அப்படிப்பட்ட ஒருவரை ஒரு தனியார் தொலைக்காட்சி ஓடை நேர்காணலுக்கு அழைத்தது. அங்கு தனக்கு சூனியம் வைக்கப் போகிறார்கள் என்று அறியாத மோடி பெருமையாக அங்கு அமர்ந்தார்.
​நிகழ்ச்சியில் நிருபர் மோடியைப் பார்த்து குஜராத் கலவரம் தொடர்பாக தன்னிலை விளக்கம் கேட்டார். அந்த நிமிடம் மோடி திக்கித் திணறி, விக்கி தண்ணீர் குடித்து பேட்டியை​ப்​ பாதியில் நிறுத்தி ஓடிப்போனதை நாடே பார்த்தது. ஏன் அமெரிக்காவும் பார்த்திருக்கலாம். இப்படி ஒரு அவமானத்துக்குப்​ பேர் பெற்ற மோடி பிரதமர் மன்மோகன் சிங்கை விவாதத்துக்கு அழைப்பது அடக்கமுடியா சிரிப்பை வர வைக்கிறது.
இந்த மோடி பிரதமராகவே ஆனாலும் அமெரிக்கா செல்ல முடியாது. ஏன் தெரியுமா? அமெரிக்​க விசா பெற அமெரிக்​கா ​வைக்கும் நிபந்தனை, நீதிமன்றத்தில் எந்த வழக்கும் நிலுவையில் இல்லாத நிரபராதியாக இருக்க வேண்டும். இவர் பிரதமரானால் நீதிமன்றத்தில் வழக்கு இல்லாமல் போய்விடுமா என்ன? பாபர் மசூதியை இடிக்க கரசேவைக்குத் தலைமை தாங்கினார் என்ற ஒரே குற்றப் பின்னணியை கொண்ட அத்வானி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு அந்தக் கட்சி படுதோல்வி அடைந்தது. இன்று நாட்டின் ஒரு சமுதாயமே வெறுக்கும் நபராகவும், வல்லரசு அமெரிக்கா புறக்கணிக்கும்  நபராகவும் இருக்கும் மோடியும் அவர் சார்ந்து இருக்கும் கட்சியும் ஒருமுறை அல்ல பலமுறை சிந்திக்க வேண்டும். இக்கட்டுரையின் இறுதியாக கவிஞர் அல்லாமா இக்பால் அவர்களின் வைர வரிகளை நினைவுகூறி நிறைவு செய்கிறேன்.
​​ "நீங்கள் எது ஒன்றுக்கும் ஆசைப்படுவதற்கு முன் அதற்கு உங்களை நீங்கள் தகுதியாக்கிக் கொள்ளுங்கள்

--நெயினார் முகம்மது (கலீல்), வீரசோழன்.  @ inneram.com 18.08.2013

                   பிரதமர் மன்(ண்)மோகன்

 

இன்று இந்தியாவில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள நாம் தின, வார, மாத இதழ்களை படிக்க வேண்டியது இல்லை.
அன்றாடம் நாடாளுமன்ற நிகழ்வுகளை கவனித்தால் போதும். நாடு எதை நோக்கி செல்கிறது; நாட்டில் என்ன என்ன பிரச்சனை போன்ற அணைத்து அம்சங்களும் நாடாளுமன்றம் என்ற அந்த திண்ணையில் விவாதிக்கபடுகிறது.
தற்போது நாட்டில் என்ன நடக்கிறது என்ற ஒரு சிறு பட்டியல் எடுத்தேன். நிலகரி ஊழல்; அது சார்ந்த ஆவணங்கள் காணவில்லை. பயமில்லாத கற்பழிப்புகள், படுமோசமான பொருளாதார பின்னடைவு; அதன் காரணமாக விலைவாசி உயர்வு, தெலுங்கான வேண்டுமா? வேண்டாமா?, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் இலங்கை படையினரால் கைது, சித்திரவதை, படுகொலை, கச்சதீவு யாருக்கு சொந்தம், சீன, மியான்மர் ராணுவ படை இந்தியாவுக்குள் ஊடுருவல், தாவூது இப்ராகிம் எங்கே இருக்கிறான்; யாருக்கு தெரியும்?, ஆதார் அட்டை அவசியமா அவசியம் இல்லையா? இது போன்ற இன்னும் ஏராளமான விசயங்கள் விவாதிக்க பட்டு விவாதங்கள் தீர்வை எட்டாமல் அமளியாகி நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு முடங்கிப் போன நாள்கள் மிக அதிகம்.
சரி.  இதற்கு என்ன தீர்வு? நாட்டில் நடக்கும் அசம்பாவிதங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க மற்றும் பதில் சொல்ல அது சார்ந்த அதிகார வர்க்கம் கடமை பட்டு இருக்கிறது. அதைத் தான் மக்களும் கேட்கிறார்கள்; நாடாளுமன்றத்தில்  உறுப்பினர்களும் கேட்கிறார்கள். அதற்கு பதில் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து கிடைக்காததால் தான் அமளி, ஒத்திவைப்பு. சரி இவ்வளவு பிரச்சனைகளையும் எப்படி நமது பிரதமர் சமாளித்தார்; எவ்வாறு வழி நடத்தினார் என்பதே மில்லியன் டாலர் கேள்வி மற்றும் இக்கட்டுரையின் நோக்கமும் .
நமது பிரதமர், முன்னாள் ரிசர்வு வங்கியின் கவர்னர்; நிதியமைச்சர் மற்றும் சிறந்த பொருளாதார நிபுணர். இவரை சமீபத்தில் டைம் பத்திரிக்கை கூட செயல்திறன் இல்லாத பிரதமர் என்று பாராட்டியது அனைவரும் அறிந்ததே. காரணம் நாடே தலைகீழாக புரண்டாலும் சிரிக்கவும் மாட்டார்; பேசவும் மாட்டார்.  உதாரணத்துக்கு ஒன்று சொல்லலாம். ஒரு சாமானியன் ஒட்டு என்ற ஒரு உரிமையை வைத்து ஒரு அதிகார வர்க்கத்தை உருவாக்க முடியும், அந்த அதிகார  வர்க்கம் என்ற அரசு உருவான  பிறகு அவனது வேலை முடிந்து விட்டது என்று இருந்த நிலையில், அதே சாமானியனால் அந்த அதிகார வர்க்கத்தை நடு வீதிக்கு கொண்டு வர முடியும் என்று "தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005" என்ற சட்டத்தை கொண்டு வந்தவர் இவர் தான். பாராட்ட வேண்டிய விஷயம் ஆனால் அந்த சட்டத்தின் இன்றைய நிலைமை மிக கவலைக்கிடம்.  
சமீபத்தில் மத்திய தகவல் ஆணையராக தீபக் சாந்து என்ற பெண் நியமிக்கபடுகிறார் என்றும் இன்றுவரை சுமார் 30.000 வழக்குகள் தகவல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளன என்றும் ஒரு செய்தி வெளியானது .உண்மைதான். அதற்கு நானே முக்கிய சாட்சி! மாநில அரசின் கட்டுபாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலக சம்பந்தமான தகவலை நான் கோரி சுமார் 10 மாதங்களுக்கு பின் எனக்கு கிடைத்தது, ஆனால் தகவல் கேட்பவருக்கு 30 நாளுக்குள் பதில் தரவேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆக பிரதமரே நேரடியாக கொண்டு வந்த இந்த சட்டத்தை அவராலே சரிவர செயல்படுத்த முடியவில்லை என்ற போது டைம் பத்திரிக்கை சொன்னது என்ன தவறு?.  இவரை பிரதமர்  பதவிக்கு தேர்வு செய்தது கட்சியின் தலைவி.
கட்சியின் தலைவி, தான் ஒரு பெண்ணாக இருப்பதால் மிக முக்கிய பதவியில் பெண் இருக்க வேண்டும் என்று விரும்புவார் போலும். அதன் வெளிப்பாடு தான் ஜனாதிபதி பிரதிபா பாட்டில், சபாநாயகர் மீரா குமார் ஆகியோர். இவர்கள் இருவரும் சரியான தேர்வாக என்னால் சொல்ல முடியாது. காரணம், பிரதிபா பாட்டில் நாட்டின் ஜனாதிபதிகளிலேயே அதிகமான ஆடம்பரமான செலவு செய்தார் என்று பேர் வாங்கித் தந்து பதவிக் காலத்தை நிறைவு செய்தார் ஒரு பெண்ணாக இருந்து அந்த பதவியின் மரியாதையை கெடுத்துக் கொண்டார். அடுத்து மீரா குமார் நாடாளுமன்றம் எப்போதெல்லாம் அமளிமயமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் மிகத்திறமையாக அவையை ஒத்தி வைத்து  விடுவார்பிறகு அமளி இல்லாமல் அவை நடக்க வெளியில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி, அதில் தோல்வி அடைவார்.  இறுதியாக மன்மோகன் சிங்.  இவரை தேர்ந்தெடுத்தது தவறு என்று சொல்ல முடியாது.

நல்ல ஒரு நிர்வாகி; பரிசுத்த அரசியல்வாதியும் கூட. பிறகு ஏன் நாட்டில் இவ்வளவு குழப்பம் என ஆராயும் போது சில சந்தேகம் எழுகிறது.  முதலில் ஐந்து ஆண்டுகள் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கைநாட்டில் அறிவு ஜீவிகளுக்கு பற்றாக்குறை இருப்பது போல மீண்டும் அவரையே தேர்ந்தெடுத்தது.  அவரை சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுக்கப்படுகிறாரோ என்ற சந்தேகம் இருக்கிறது. இப்படி இருக்கும் போது கடைசியாக மன்மோகன் சிங்  அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அது என்ன வென்றால்.....  நான் ஒரு திறந்த புத்தகம்.  ராகுல் காந்தி பிரதமாராக மிக தகுதியானவர். அவருக்கு கீழ் பணியாற்ற நான் விரும்புகிறேன். இதற்கு நாம் புரிந்து கொண்டதிலிருந்து, நம்முடைய விளக்கம்:
1.     நான் நேர்மையானவன்; எந்த விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன்.
2.     நான் பிரதமராக இருந்து பொருளாதார மற்றும் பல பிரச்சினைகளை கட்டுபடுத்த தவறிவிட்டேன் ஆதலால் ராகுலை பிரதமராக்குங்கள்.
3.     ராகுலை பிரதமராக்கி என்னை ஒதுக்கி விடாதீர்கள் என்னையும் மரியாதையாக நடத்துங்கள் என்பது தான்.
இப்படி நாம் நினைக்க ஒரு வலுவான காரணமும் இருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் மருத்துவமனையில் இருக்கிறது என்று குஜராத் முதல்வர் கிண்டலடிக்கிறார். சாமானியன் கூட நாட்டின் நிலைமை குறித்து எரிச்சல் அடைகிறான் இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் நீண்டநாளுக்கு பின் வாய் திறக்கும் பொருளாதார மேதையான பிரதமர் தன் மகன் வயது ராகுலை பிரதமராக்குங்கள் என்று சொல்வதும், நான் அவருக்கு கீழ் வேலை செய்ய விரும்புகிறேன் என்று சொல்வதும் தான் நமக்கு மேல் கூறிய சந்தேகம் எழுவதற்கான காரணமாக இருந்தது.
சரி. இப்போது நாம் முடிவுக்கு வருவோம். நாட்டின் தற்போதைய நிலை குறித்தும், அதன் காரணங்கள் குறித்தும் மக்களுக்கு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும். பிறகு ஆக்கபூர்வ நடவடிக்கை பிரதமரின் நேரடி தலைமையில் எடுக்கப்படவேண்டும். செய்வார்களா?
 M. நெயினார் முகம்மது (கலீல்), வீரசோழன் @ inneran .com .09.09.2013

 



27 அக்டோபர், 2013

                                   பலவீனமான தீர்ப்புக்கள்
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உயர் நீதிமன்றங்கள் இருக்கின்றன; அவற்றில் ஒவ்வொரு நாளும் பல வழக்குகளுக்கு தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.
வழக்கின் தீர்ப்பில் திருப்தி கொள்ளாதவர்கள், அந்த வழக்கை உச்ச நீதி மன்றத்துக்கு கொண்டு செல்கிறார்கள். அங்கு ஏற்கனேவே தீர்ப்பு வழங்கப்பட்ட, அந்த வழக்கின் நிலை என்ன என்பதை சுட்டிக் காட்டுவதே இந்த கட்டுரையின்முக்கிய அம்சம்.
               
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் வழக்குகளின் தீர்ப்புகள் பெரும்பாலும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையே சரி என்கிறது. சில வழக்குகளின் தீர்ப்புகள் திருத்தவும் படுகின்றன. அப்படியென்றால் ஒரு வழக்கிற்கு இரண்டு தீர்ப்புக்கள் எப்படி சாத்தியம்? குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டவர், உச்ச நீதிமன்றத்தில் நிரபராதியாகிறார். மரணதண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கபடுகிறது, நிறுத்தி வைக்கப்பட்ட செயல் திட்டங்கள் தொடங்கப்படுகின்றன, தொடங்கப்பட்டவை நிறுத்தி வைக்கப்படுகிறது. இவை எல்லாம் யாருக்கு சாத்தியம் என்றால், பணம் படைத்தவர்களுக்கு மட்டும் தான் சாத்தியம். அப்படியென்றால் ஏழைகளின் நிலை? அவர்களெல்லாம் மாவட்ட நீதிமன்றங்களின் தீர்ப்போடு முடங்கி போகும் பரிதாபம் பலருக்கும் தெரியாது.
                
இதற்கு காரணம் சாட்சிகள் அழிக்கப்படுவதும், சாட்சிகள் விலைக்கு வாங்கப்படுவதும், வழக்குகளை காலதாமதபடுத்துவதும், கடைசியாக நீதிபதிகள் மாற்றபடுவது. இப்படி பல காரணங்களை கொண்டு வாதியும், பிரதிவாதியும் பந்தாடபட்டு அந்த வழக்கு, தீர்ப்பை எட்டும் போது வாதியோ, பிரதிவாதியோ இறந்து போவார்கள் அல்லது உயிருடன் இருந்தால் தீர்ப்பை கேட்டு நொந்து போவார்கள்.
                  
பல ஆண்டுகளாக நடந்து வந்த பாபரிமஸ்ஜித் வழக்கின் தீர்ப்பை கேட்டு சிறுபான்மை சமூகம் நொந்து போனது. அப்சல் குருவின் வழக்கோ மிக பரிதாபம்; அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிருபிக்கப்படவில்லை. இருப்பினும் கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் மரணதண்டனை விதித்து தனது அரக்க குணத்தை காட்டியது உச்ச நீதிமன்றம். அவரை தூக்கிலிட்டு அவரது உடலை அவரது குடும்பத்தாரிடம் தர மறுத்தது அரசு. இன்று அவர் நிரபராதி என்று பல ஆதாரங்கள் வெளியாகி விட்டன. இது மிகப் பெரிய பரிதாபம்.
                  
சிறிய நீதிமன்றங்களில் சாதாரணமாக பிறப்பு சான்றிதழ் வாங்க நான்கு மாதங்கள் ஆகின்றது, ஆனால் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கு ஒன்பது மாதத்தில் தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. அப்படியென்றால் நாடு முழுவதும் நிலுவையிலுள்ள பல்லாயிரக் கணக்கான வழக்குகளின் நிலை என்ன? நாடு முழுவதும் விசாரணை கைதிகளாக பல ஆண்டுகளாக சிறையில் அடைபட்டிருக்கும் அவர்களின் நிலை?. இன்றும் கேள்விக்குறியாக உள்ளது. சமீபத்தில் ஆந்திர நீதிமன்றத்தில் நடந்த ஒரு குளறுபடியை சொன்னால் தீர்ப்புகள் எப்படி வழங்கப்படுகின்றன என்பதனை அறிந்து கொள்ள முடியும்.
               
ஆந்திராவில் 2007 ஆம் ஆண்டு மக்கா மசூதியில் குண்டு வெடித்தது; அதில் 9 பேர் பலியானார்கள். குண்டு வெடித்ததோ இஸ்லாமிய சமூகத்தினரின் வழிபாட்டுத்தலத்தில். ஆனால் ஆந்திர காவல்துறையோ அப்பாவி இஸ்லாமியர்கள் 70 பேரை கைது செய்தது. சிபிஐ விசாரணைக்கு பின்னர் அவர்கள் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டார்கள். அதனை தொடர்ந்து, முதல்வர் கிரண்குமார் ரெட்டி மனிதாபிமான அடிப்படையில் நஷ்டஈடு அறிவித்தார். இதனை பொறுத்துக் கொள்ளாத வழக்கறிஞர் வெங்கடேஷ் கௌட் என்பவர் நஷ்டஈட்டுக்கு தடைகோரி பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். இதை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் நஷ்டஈடு வழங்க தடை போட்டதோடு, நஷ்டஈடு ஏற்கெனவே வழங்கபட்டிருந்தால் அதனை திரும்பப் பெறவும் வலியுறுத்தியது.
இந்த செய்தியை செய்தித்தாளில் படித்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். காரணம், வெங்கடேஷ் கௌடின் சொத்தை பிடுங்கி நஷ்டஈடாக அரசு கொடுக்கவில்லை; அல்லது அந்த அப்பாவிகள் 70 பேர் சிறையில் கஷ்டப்பட்ட போது, அந்த நபர்களின் குடுபத்தார் வாழ்வாதாரத்துக்கும் சொல்ல முடியா துயரத்துக்கும் ஆளான போது அந்த குடும்பத்தாரை இந்த வெங்கடேஷ் கௌட் போய் தாங்கி பிடிக்கவில்லை. பிறகு ஏன் இந்த இனத்துவேசம்? அதுவும் பொதுநல வழக்கு என்ற பெயரில். பொதுநல வழக்கு மக்களின் நன்மைக்காக இருக்க வேண்டுமே தவிர மக்களை சங்கட படுத்தக் கூடாது. நான் நினைக்கிறன், வெங்கடேஷ் கௌட் அந்த நஷ்டஈடு தொகையை அரசாங்கத்துக்கு மிச்சபடுத்திக் கொடுத்து, அரசாங்கத்தை காப்பாற்ற முயன்றார் போலும்.
அடுத்த 2 நாளுக்கு பிறகு அதே ஆந்திர நீதிமன்றத்தில் இருந்து வந்த தீர்ப்பு நம்மை மிகப் பெரிய ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.
அது என்னவென்றால்.....  அரசின் தவறான நடவடிக்கையால், பாதிக்கப்பட்டோருக்கு அரசு நஷ்டஈடு வழங்க தடைவிதித்த தீர்ப்பை வாபஸ் பெற்றதாகும். காரணம், இது போன்ற நஷ்டஈடு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியதை மேற்கோள் காட்டி, தடை விலக்கி கொள்ளப்பட்டது. அப்படியென்றால், முதலில்  தீர்ப்பு சொல்லும் போது அரசு வழக்கறிஞர் என்ன செய்து கொண்டு இருந்தார்? அவர் கவனமாக செயல் பட்டு இருந்தால் நீதிமன்றத்துக்கே இப்படி ஒரு சறுக்கல் ஏற்பட்டு இருக்காதே.
ஆனாலும் இதில் நமக்கு ஒரு வருத்தம் இருக்கவே செய்கிறது. இந்த எல்லா குழப்பத்துக்கும் காரணமான   வழக்கறிஞர் வெங்கடேஷ் கௌட்க்கு நீதிமன்றம் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை, அது நீதி மன்றத்துக்கு தெரியாத காரியமும் அல்ல.
             
சென்னையில் ட்ராபிக் ராமசாமி என்பவருக்கு பொதுநல வழக்கு போடுவது முழு நேர தொழில். அவரை ஒரு வழக்கின் போது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்து விட்டதாக கடும் கண்டனம் தெரிவித்ததோடு மட்டும் அல்லாமல் ட்ராபிக் ராமசாமிக்கு ரூபாய் 10,000 அபதாரம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை நினைவு கூறுகிறேன்.
            
தாமதமாக வழங்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமம் என்று உலக பொது மொழி ஒன்று உண்டு. நமது கருத்து என்னவென்றால் நீதி தாமதமானால் கூட சகித்துக்கொள்ளலாம். ஆனால் தவறாகிப் போனால் அதன் இழப்பை நாம் சரி கட்ட முடியவே முடியாது. கூட்டு மனசாட்சி அப்சல் குருவின் மனசாட்சிக்கு முன்னால் மௌனமாகி போனதை நாம் மறக்கவும் முடியாது; மறுக்கவும் முடியாது .
                 
- M. நெயினார் முகம்மது (கலீல்)


31 ஜனவரி, 2013

விஸ்வரூபம் சினிமாவுக்கு தடை !

என்ன செய்வது இவர்கள் இஸ்லாத்தையும் ,முஸ்லிம்களையும் வைத்துதான் சோறு உன்ன வேண்டி இருக்கிறது : இலங்கை பத்திரிக்கையாளர்