என்னை தொட்டவர்கள் !

25 மார்ச், 2012

வக்ப் போர்டு தலைவர் நியமனம் எப்போது?


ஆட்சி மாற்றங்கள் நிகழும் போது முந்தைய அரசால் நியமிக்கப் பட்ட வாரியத் தலைவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் எனப் பலரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விடுவது வழக்கம். அது போன்றே முந்தைய திமுக அரசால் வக்பு போர்டு தலைவராக நியமிக்கப் பட்ட கவிக்கோ அப்துல் ரஹ்மானும்  தம் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
எனினும் வக்பு போர்டுக்கு இதுவரை புதிய தலைவர் நியமிக்கப் பட வில்லை. தலைவர் இல்லாத நிலையிலேதான் வக்பு போர்டு இது வரை செயல் பட்டு வருகிறது. வக்பு போர்டு தலைவர் பதவி மனிதநேய மக்கள் கட்சிக்கு வழங்கப் படும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் மனித நேய மக்கள் கட்சியும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி விட்டது.
கவிக்கோ அப்துல் ரஹ்மான் ராஜினாமா செய்து விட்ட நிலையில் அவரது பெயர் இன்னும் வக்ப் போர்டு இணைய தளத்தில் இருந்து நீக்கப் பட வில்லை. தமிழக அரசு இனி மேலும் காலம் தாழ்த்தாமல் இஸ்லாமிய மக்களின் சொத்துக்களைப் பராமரிக்கும் வக்ப் போர்டுக்கு உடனடியாக சேர்மன் நியமிக்கப் பட வேண்டும் என்று முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஊழலை விட ஐஸ்வர்யாவின் பிரசவமும் சச்சினின் சதமும் முக்கியமா – நீதிபதி கட்ஜு காட்டம்


புது தில்லி : உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும் பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜு அன்னா ஹசாரேவை தாம் மதித்தாலும் ஊழலை ஒழிக்க எவ்வித விஞ்ஞான அடிப்படையிலான திட்டங்களும் அவரிடம் இல்லை என்றும் ஊழலை விட முக்கியமற்ற விஷயங்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
ஊடகங்கள் ஊழல் ஒழிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட அதிகமாக சச்சின் டெண்டுல்கரின் 100வது சதம், ராகுல் டிராவிட்டின் ஓய்வு, ஐஸ்வர்யா பச்சனின் பிரசவம், நடிகர் தேவ் ஆனந்தின் மறைவு போன்றவற்றிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக கட்ஜு குற்றம் சாட்டினார்.
அன்னா ஹசாரே ஒரு நேர்மையான மனிதர் என்று தான் நம்பும் அதே சமயத்தில் ஊழலை ஒழிக்க அவரிடம் எவ்வித விஞ்ஞான பூர்வ திட்டங்களும் இல்லை என்றும் கட்ஜு கூறினார். பாரத் மாதா கி ஜெய் மற்றும் இன்குலாப் ஜிந்தாபாத் என்று 10 நாட்கள் கோஷமிடுவதால் ஊழலை ஒழிக்க முடியாது என்றும் நீண்ட கால நோக்கில் ஆக்கபூர்வ திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் மார்க்கண்டேய கட்ஜு கூறினார்

பிரிட்டன்: முஸ்லிம்களுக்கு எதிராக அரசியல் கட்சி தொடக்கம்


ஆங்கிலேயர் தற்காப்பு இயக்கம் என்ற பெயரில் மூன்றாண்டுகளாக பிரிட்டனில் இயங்கிவந்த அமைப்பொன்று வலதுசாரி அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிரான கட்சியாக விடுதலைக் கட்சி Freedom Party என்ற பெயரில் ஓர் அரசியல் இயக்கமாக உருவெடுத்துள்ளது.
3 ஆண்டுகளுக்கு முன்னர் அடித்தள மக்களின் இயக்கம் என்ற தோற்றத்தில்  இந்த விடுதலைக் கட்சி இயக்கம் தொடங்கிக் கட்டமைக்கப்பட்டது. இலண்டனுக்கு வடக்கேயுள்ள லூட்டோன் நகரத்தில் விடுதலைக் கட்சி (Freedom Party) என்ற பெயரில் இது உதயமானது. இப்போது, இந்த அமைப்பு இஸ்லாமியருக்கு எதிரான அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது.

பிரிட்டிஷ் இராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து நாடு திரும்பியவுடன் இராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போபோது முஸ்லீம்கள் அவர்களை எதிர்த்துக் கோஷம் எழுப்பினர். இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முஸ்லீம்களுக்கு எதிரான இயக்கத்தில் 12,000 பேர் இணைந்துள்ளனர். 31,000 பேர் தங்களின் ஆதரவை ஃபேஸ்புக் இணையதளம் மூலம் தெரிவித்துள்ளனராம்.

இந்தத் தகவலை இந்த அமைப்பின் தலைவர் ஸ்டீஃபன் லென்னோன் செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் மக்கள்தொகை 62 மில்லியன்  என்பது குறிக்கத்தக்கது.

24 மார்ச், 2012

தோசை சாப்பிட்டாலே பணக்காரரா? பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேள்வி!


வக்ப் வாரியத் தலைவரை உடனடியாக நியமனம் செய்யவும், கூடங்குளம் அணுஉலை தொடர்பான அரசின் முடிவை மீள்பரிசீலனை செய்யவும், திட்டக் கமிசனின் வறுமைக் கோட்டு வரையறையை திரும்பப் பெற்றுக் கொள்ளவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் 21,22.03.2012 ஆகிய  தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ஹாலித் முஹம்மது, துணை தலைவர் முஹம்மது இஸ்மாயில் பொருளாளர் கே. எஸ்.எம். இப்ராஹிம் என்ற அஸ்கர் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

செயற்குழுவில் நிறைவேற்றப் பட்ட  தீர்மானங்கள் :

1. புதிய அரசு பொறுப்பேற்று பல மாதங்களாகியும் வக்ஃபு வாரியத் தலைவர் இன்னும் நியமனம் செய்யப்பட வில்லை. இது வக்ஃப் வாரியம் மீதும் அதன் சொத்துக்கள் மீதும் அரசு  கவனம் செலுத்த விரும்பவில்லை என்பதுடன் முஸ்லிம்கள் விவகாரத்தில் அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு வருவது போன்று தோற் றமளிக்கின்றது. அது மட்டுமல்லாமல் வக்ஃப் சொத்துக்கள் அரசியல்வாதிகளால் குறிப்பாக ஆளும் கட்சியினரால்  ஆக்கிரமிப்பு  செய்யப்பட்டு வருவதும் அதனை ஆளும் அரசு கண்டும் காணாமல் இருப்பதை வன்மையாக கண்டிக்கும் இச்செயற்குழு இது தொடர்பாக உள்துறைச் செயலர்,சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்துஉரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென முறையிடவும் தீர்மானித்துள்ளது.
2. கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து போராடி  வரும் மக்களின் உணர்வுகள் மற்றும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளநியாயமான சந்தேகங்களை புறந்தள்ளி விட்டு அணுஉலை செயல்பட தமிழக அμசு அனுமதித்துள்ளதை வன்மையாக கண்டிக்ககின்றது இச்செயற்குழு. மேலும்,  கூடங்குளம் பகுதி மக்கள் காவல்துறையினரின் குவிப்பினால் அடக்கு முறைக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டு அவர்களின் தினசரி வாழ்க்கை பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது. அரசு  இது விஷயத்தில் கூடங்குளம் மக்களின் ஜனநாயகரீதியிலான போராட்டத்திற்கு மதிப்பளித்து அங்கு   நிலைமைகள் சீரடைய துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கூடங்குளம் அணுஉலை தொடர்பான அரசின் முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கின்றது.
3. இந்திய நகரங்களில் வாழும் ஒருவர் ஒரு நாளைக்கு ரூபாய் 29ம் கிராமத்தில் வாழக்கூடிய ஒருவர் ரூபாய் 22ம் சம்பாதிக்கின்றார் எனில் அவர் அனைத்து வசதிகளையும் ஒருங்கே அமையப் பெற்றவர் என்றும் அதற்கு கீழ் வருமானம் உள்ளவர்கள் தான் ஏழைகள் என்றும் ஆய்வு செய்து செய்தி வெளியிட்டுள்ளது மத்திய அμசின் திட்டக் கமிஷன்.இன்று பெட்ரோல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டு பலரின் தினசரி வாழ்வையே கேள்விக்குரியதாக ஆக்கி வரும் இவ்வேளையில் நீங்கள் ஹோட்டலில் ஒரு தோசை சாப்பிட்டாலே பணக்காரர்கள் பட்டியலில் வந்து விடுவீர்கள் எனும் கேலிக் கூத்தான அறிக்கையை வெளியிட்டு இந்திய மக்களின் மேல் மேலும்ஒரு இடியை இறக்கி உள்ளது மத்திய அரசின் திட்டக்கமிஷன்.திட்டக்கமிஷனின் இந்த அறிவிப்பை வன்மையாக கண்டிக்கும் பாப்புலர் ஃப்μண்ட் திட்டக் கமிஷனின் இந்தஅறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டுமெனவும் நடைமுறைக்கும் அறிவுக்கும் ஒத்துவராத இது போன்ற முடிவுகளை வெளியிடுவதில் மத்திய அரசு போதிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கின்றது.

23 மார்ச், 2012

பாப்புலர் பிரண்ட் பிரமுகர் கொலை - மார்க்ஸிஸ்ட் கட்சியினர் கைது


பாப்புலர் பிரண்ட் கட்சியினைச் சார்ந்த முஹம்மத் பஸல் கொலை செய்யப்பட்ட வழக்கில் மார்க்ஸிஸ்ட் கட்சியினரைச் சார்ந்த மூவரை மத்திய புலனாய்வுக்குழு கைது செய்துள்ளது.
பாப்புலர் பிரண்ட் கட்சியின் தளச்சேரி தலைவராக 2006 ஆம் ஆண்டு பஸல் இருந்து வந்தார். அப்போது இந்தக் கட்சி தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. பஸல் மார்க்ஸிஸ்ட் கட்சியில் இருந்து விலகி பாப்புலர் பிரண்ட் கட்சியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்களை பாப்புலர் பிரண்டில் சேருமாறு அவர் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது கோபம் கொண்ட அருண்தாஸ், காலேஷ் மற்றும் அருண்குமார்   ஆகியோர் பஸலைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பஸலை இம் மூவரும் கொலை செய்துள்ளனர். தற்போது இம்மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரையும் மார்ச் 29 வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கா விசா பெறுவதற்கு இனி நேர்காணல் கிடையாது !


அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் சிலர் அந்நாட்டு விசா எடுத்து அங்கு பணி செய்தோ அல்லது வசிக்கவோ செய்கின்றனர். அவர்கள் தங்களின் விசா முடிவுறும் காலத்தைப் பொறுத்து புதுப்பித்து வருகின்றனர்.
அதன்படி, பி1, பி2, சி மற்றும் டி பிரிவு விசாவில் சென்றுள்ளவர்கள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது விசாவினை புதுப்பித்து வருகின்றனர். அவர்கள் விசாவை புதுப்பிக்கும்போது நேர்காணல் இருக்கும். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே விசா புதுப்பிக்கப்படும்.

ஆனால் இந்த முறை தற்போது மாற்றப்பட்டுள்ளதாக துணைத்தூதரக விவகாரங்கள் துறையின் உதவி செயலாளர் ஜானிஸ் ஜேக்கப் கூறியுள்ளார். மேலும், இந்த புதிய முறை வர்த்தகர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோருக்கு பொருந்தும்.

இந்த புதிய முறை இந்தியாவில் தொடங்கப்பட உள்ளது. ஆனால் பாதுகாப்பு கருதி இவர்கள் எப்போது வேண்டுமானாலும் நேர்காணலுக்கு உட்படுத்தப்படுவர் எனவும் கூறினார்

2 மார்ச், 2012

முஷாரஃப்பை கைது செய்ய பாகிஸ்தான் தீவிரம்!


முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப்பை கைது செய்து பாகிஸ்தானுக்குக் கொண்டு வருவதில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக அந்நாடு பன்னாட்டுக் காவல்துறையின் ஒத்துழைப்பை நாடியுள்ளது.
முஷாரஃப் தற்போது லண்டனில் வசித்து வருகிறார் என்பது அறிந்ததே. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் கொலைவழக்கில் முஷாரஃபை விசாரிக்க வகை செய்யும் விதமாக அவர் கைது செய்யப்படவுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபை கைது செய்ய செங்கூவல் (ரெட் அலர்ட்) பிறப்பிக்குமாறு சர்வதேச காவல்துறையான இண்ட்டர் போலை பாகிஸ்தான் அதிகாரிகள் கோரியுள்ளதாக இங்கிலாந்து செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பிரதமர் பெனாசிர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக அவரை திரும்பக் கொண்டுவர பாகிஸ்தான் முயன்று வருகிறது. முஷாரபை கைது செய்ய இன்டர்போலுக்கு  நேற்று முறைப்படியான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.