என்னை தொட்டவர்கள் !

30 அக்டோபர், 2010

பிரிட்டனில் அதிக குழந்தைகளுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் 'முகம்மது

யுனைட்டட் கிங்டம் ஆஃப் கிரேட் பிரிட்டன் (சுருக்கமாக யு.கே.) என்று அழைக்கப்பட்டும் பிரித்தானியாவில் புதிதாகப் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு அதிகமாக வைக்கப்படும் பெயர் 'முகம்மது' என்று சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக கார்டியன் நாளிதழ் கூறியுள்ளது.

இது கடந்த 14 வருடங்களாக முன்னணியில் இருந்த 'ஜாக்' (jack) என்ற பெயரை முந்தியுள்ளது. சென்ற வருடம் மூன்றாவது வரிசையில் 'முகம்மது' என்ற பெயர் இருந்தது. இந்த வருடம் அது முன்னிலைக்கு வந்துள்ளது.

இதுபோல 'ஓலிவியா' (Olivia ) என்ற பெண் குழந்தைகளுக்கான பெயர் கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் முன்னிலையில் உள்ளது.

மொத்தம் 7549 ஆண் குழந்தைகளுக்கு 'முகம்மது' என்ற பெயர் பல்வேறு வித எழுத்து வடிவில் வைக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள பிரபல நாளிதழ் டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

ஆனால் முகம்மது என்ற பெயர் ஆங்கிலத்தில் பல்வேறு தவறான எழுத்தில் (அதாவது Muhammad மற்றும் Mohammad) அமையாமல் Mohmmed என்ற சரியான ஆங்கில எழுத்தில் அமைந்து இருந்தால் இந்த கணக்கெடுப்பில் முகம்மது என்ற பெயர் இன்னும் அதிகரித்து இருக்கும் என்ற கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த கணக்கெடுப்பில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியில் 16 வகையான எழுத்தில் அமைந்த முகம்மது என்ற பெயர் சேர்க்கப்படவில்லை. 


முகம்மது என்பது முஹம்மத் என்ற சரியான உச்சரிப்பு கொண்ட அரபியில் அமைந்த பெயர். முகம்மது  உலக முழுவதும் வாழும் 1.66 பில்லியன் (166 கோடி) முஸ்லிம்களின் கடைசி இறை தூதர் ஆவார். அவரது பெயரை முஸ்லிம்கள் உச்சரிக்கும் போதெல்லாம் கூடவே 'ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்' என்று சேர்த்து அழைப்பார்கள் .இதன் பொருள் "அல்லாஹ் தன்னுடைய தூதரான முஹம்மது மீது கருணையும் சாந்தியும் பொழிவானாக" என்பதாகும்.

28 அக்டோபர், 2010

இஸ்லாமிய வங்கி முறையை RBI அறிந்து கொள்ள பிரதமர் வேண்டுகோள்!

மலேசியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து ஆய்வு செய்து அதனை இந்தியாவில் அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி முனைய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
இஸ்லாமிய வங்கியலை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பல தரப்பிலும் கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை செயல்படுத்தும் விதமாக, மாலேசிய வங்கிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு செய்ய வேண்டும் என்று நான் ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்கிறேன்என்று பிரதமர் மன்மோகன் சிங் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கூறினார்.
மலேசியாவில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து அறிய இந்தியா விரும்புகிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் பிரதமர் இவ்வாறு கூறினார்.
அரசு முறைப் பயணமாக மலேசியா சென்றுள்ள பிரமர், மலேசியப் பிரதமர் முஹம்மது நஜீப் துன் அப்துல் ரஜாக்குடன் பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல் குறித்து விரிவாகப் பேசினார்.
வட்டியில்லா வங்கி முறையான இஸ்லாமிய வங்கியை இந்தியாவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கிக்கு பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

26 அக்டோபர், 2010

பாபர் மசூதி: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அஹ்மதி

புது டில்லி : 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டதை, "உச்சநீதிமன்றம் தடுக்க வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டிருந்தால் தடுத்திருக்க முடியும்" என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அஹ்மதி கருத்து தெரிவித்துள்ளார்.
அயோத்தி தீர்ப்பு குறித்த மக்கள் சமூகத்தின் நிலைப்பாடு எனும் தலைப்பில் இன்ஸ்டியூடூட் ஆப் ஆஃப்ஜக்டிவ் ஸ்டடிஸ் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் பேசிய அஹ்மதி, பாபர் மசூதி இடிப்புக்கு முன் உச்சநீதிமன்றத்தில் அப்போதைய அட்டர்னி ஜெனரல் மிலன் பானர்ஜி மசூதி இடிக்கப்படுவதற்கு ஏராளமான சாத்தியக்கூறுகள் உண்டு என்றும் அந்நிலத்தை உடன் மத்திய அரசிடம் ஒப்படைத்து மசூதி இடிக்கப்படுவதை தடுத்து நிறுத்தும்படி உச்சநீதிமன்றத்தில் அப்போது இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் வெங்கடாச்சலையா மற்றும் ரேயிடம் வலியுறுத்தியதை நினைவூட்டினார்.
அட்டர்னி ஜெனரலின் கோரிக்கையை ஏற்று அந்நிலத்தை மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் ஒப்படைத்திருந்தால் பாபர் மசூதி இன்றும் அதே இடத்தில் இருந்திருக்கும் என்று கூறிய அஹ்மதி, அதற்குப் பதிலாக அடையாள கரசேவை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது தவறானது என்றும் பாபர் மசூதி இடிப்புக்காக கல்யாண் சிங்குக்கு வழங்கப்பட்ட ஒரு நாள் தண்டனை நகைப்புக்கிடமானது என்றும் கூறினார்.
மேலும் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பாகவே கருத முடியவில்லை என்றும் இந்திய அரசியல் சாசனம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்றும் அஹ்மதி கூறினார். மேலும் இவ்விழாவில் பேசிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சையது சஹாபுதீன் உள்ளிட்ட பலர் இது முஸ்லீம் மற்றும் இந்து நம்பிக்கைக்கும் இடையிலான மோதல் அல்ல என்றும் அரசியல் சாசனம் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் தீர்ப்பு கொடுக்கபட வேண்டுமே தவிர குரான் மற்றும் கீதையின் அடிப்படையில் அல்ல என்றும் கூறினர்

25 அக்டோபர், 2010

நீதிமன்றத்தில் அழுதுகொண்டே சாட்சியமளித்தார் ஜாகியா ஜாஃப்ரி !

அஹ்மதாபாத்: கடந்த 2002 குஜராத் கலவரங்களின் போது, குல்பர்க் சொசைடி என்ற பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் காங்கிரஸ் எம்.பி. யான இஹ்ஸான் ஜாஃப்ரி இந்துத்துவாவினரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இது குறித்து கடந்த வெள்ளிக்கிழமை சாட்சியமளித்த அவரது மனைவி ஜாகியா ஜாஃப்ரி, இஹ்ஸான் ஜாஃப்ரி தனது வீட்டிலிருந்து கொலைவெறி பிடித்த கும்பலால் இழுத்து வரப்பட்டு, அவரது உடைகள் கிழிக்கப்பட்டு, வெட்டப்பட்டு பின்னர் உயிருடன் எரிக்கப்பட்டார்; இதனை எனது வீட்டின் முதல் தளத்தில் இருந்து ஜன்னல் வழியாக பார்த்தேன் என்று அழுதவாறே நீதிமன்றத்தில் கூறினார்.
3000 பேர் கொண்ட ஆயுதம் தரித்த கும்பலால் தாக்குதலுக்குள்ளான அன்றைய தினத்தில் (ஃபிப்ரவரி 28, 2002) தானும் குல்பர்க் சொசைடியைச் சேர்ந்த மக்களும் எவ்வாறெல்லாம் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டோம் என்பதை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜோஷி முன்னிலையில் விளக்கினார் திருமதி ஜாகியா. கோத்ரா ரயில் விபத்து நடந்த அடுத்த நாள் நடந்த இக்கொடூரத் தாக்குதலில் மட்டும் மொத்தம் 69 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் அவர் அந்த துயர சம்பவத்தை விளக்கிக் கூறுகையில், வெறிபிடித்த கூட்டம் ஒன்று குல்பர்க் சொசைடியின் வாயிலையும், ஒருபக்க சுற்றுச்சுவரையும் உடைத்துக் கொண்டு உள்நுழைந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் வாள்களாலும், இன்ன பிற ஆயுதங்களாலும் தாக்கியது; பல உயிர்கள் பறிக்கப்பட்டன; அவர்களது உடல்கள் எனது வீடெங்கும் பரவிக் கிடந்தது என்று கூறினார்.
போலீசார் மாலை நேரத்திலே சம்பவ இடத்திற்கு வந்த பிறகே நான் முதல் தளத்திலிருந்து கீழே வர முடிந்தது. கீழே வந்து பார்த்த போது, வராண்டாவில் எனது பக்கத்து வீட்டுக்காரரான கஸம்பாயினுடைய மனைவியின் உடலும் கர்ப்பிணியான அவரது மருமகளின் உடலும் மோசமாக பாதிக்கப்பட்டு கிடந்தது; அந்த கர்ப்பிணிப்பெண் வயிற்றுப் பகுதியில் கத்தியால் கிழிக்கப்பட்டிருந்ததால் அவரது கர்ப்பம் வெளியில் கிடந்தது என்றும் ஜாகியா கூறினார். தனது வீட்டின் பின்புறமும் பல உடல் கிடந்ததாக மேலும் அவர் கூறினார். பின்னர் அவர் எதிர்தரப்பு வழக்கறிஞரால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார்.
2002ல் நடைபெற்ற குஜராத் கலவரம் முஸ்லிம்களுக்கு எதிராக ஆளும் அரசே கட்டவிழ்த்து விட்ட ஒரு இன அழிப்பு என்றும், மதச்சார்பற்ற இந்தியாவின் இறையாண்மைக்கே ஏற்பட்ட அவமானம் என்றும் மனித உரிமை அமைப்புக்களும், சமூக நல ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். இச்சம்பவம் நடந்த போது பிரதமராக இருந்த வாஜ்பேயி, "இனி நான் எப்படி சர்வதேச சமூகத்தை சந்திக்க முடியும்" என்று கூறியதும், குஜராத் அரசு நீதிமன்றங்களின் கண்டணங்களுக்கு ஆளானதும், கலவரம் குறித்த பல்வேறு வழக்குகள் குஜராத் நீதிமன்றங்களிலிருந்து வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டதும், குஜராத் கலவரத்தை காரணம் காட்டியே முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விசா வழங்க மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய மதத்துக்கு மாறிய டோனி பிளேரின் உறவினர்

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமராக இருந்தவர் டோனி பிளேர். இவரது மனைவி செர்ரி பிளேரின் ஒன்று விட்ட சகோதரி லாரன் பூத். 43 வயதாகும் இவர் இஸ்லாமிய மதத்துக்கு தான் மாறியுள்ளதாக அறிவித்துள்ளார்.
லாரன் பூத் ஈரானில் உள்ள பிரஸ் தொலைக்காட்சியில் வேலை செய்து வருகிறார். அண்மையில் ஈரானில் கோம் நகரத்திலுள்ள பாத்திமா மாசூம் என்ற சன்னதியில் இருக்கும்போது ஏற்பட்ட ஆன்மீக மன மாற்றமே தனது மத மாற்றத்திற்கு காரணம் என லண்டனிலிருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
தற்போது ஹிஜாப் எனும் இஸ்லாமிய ஆடையை அணிவதாகவும் 5 வேளை தொழுவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது மது அருந்துவதில்லை என குறிப்பிட்ட அவர் 25 வருடங்களாக இருந்த இந்த தீய பழக்கத்தை தற்போது விட்டுவிட்டதாக குறிப்பிட்டார். தினமும் மது அருந்தாமல் இருக்க முடியாத தான் இஸ்லாத்திற்கு மாறிய பிறகு அந்த எண்ணம் கூட இல்லாமல் இருப்பது கண்டு ஆச்சர்யப்படுவதாக கூறினார். குர்ஆனை தினமும் படித்து வருவதாகவும் கூறியுள்ள லாரன் தற்போது 60 பக்கங்கள் வரை படித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
வரும்காலங்களில் பர்தா அணிவீர்களா என்ற கேட்கப்பட்டதற்கு வரும்காலத்தில் தனது ஆன்மீகப் பாதை எங்கே அழைத்துச் செல்லும் என யார் அறிய முடியும் என பதிலளித்தார். காஸாவின் மீதான இஸ்ரேலின் பொருளாதாரத் தடையை எதிர்த்து 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 46 நபர்களுடன் சைப்ரஸிலிருந்து காஸாவுக்கு சென்றுள்ளார் லாரன் பூத். ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தையும் எதிர்த்தவர் பூத்.

24 அக்டோபர், 2010

இராக் போரில் 66 ஆயிரம் பொதுமக்கள் பலி: விக்கிலீக்ஸ் அதிர்ச்சி தகவல்

நியூயார்க்/வாஷிங்டன், அக்.23: இராக் போரில் 66 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட அதிர்ச்சித் தகவலை "விக்கிலீக்ஸ்' இணையதளம் வெளியிட்டுள்ளது.
இராக் போர் குறித்து 4 லட்சம் ஆவணங்களை திங்கள்கிழமை வெளியிடப் போவதாக "விக்கிலீக்ஸ்' ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த ஆவணங்கள் வெளியானால் பொதுமக்களுக்கும் இராக்கில் உள்ள பன்னாட்டு வீரர்களின் உயிருக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று பென்டகனில் பன்னாட்டுப் படைகளின் (நேட்டோ) தலைவர் ஆண்டர்ஸ் ஃபாக்ஸ்ராஸ்முùஸன் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் 4 லட்சம் ஆவணங்களின் முக்கிய தகவல்களை "நியூயார்க் டைம்ஸ்' நாளேடு சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.
இராக் போரின்போது நடத்தப்பட்ட கொடுமைகள், சித்திரவதைகள் ஆகியன ஆவணங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன. 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான சம்பவங்கள் அனைத்தும் இதில் இடம்பெற்றுள்ளன. இராக்கில் உள்ள பொதுமக்களில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்தும், இராக் ராணுவத்துக்கு ஈரான் எந்த வகையில் உதவியது என்பதும் இராக் ராணுவ மற்றும் போலீஸôரின் செயல்பாடு குறித்தும் டைம்ஸ் நாளேட்டில் தகவல் வெளியாகியுள்ளது.
உலகிலேயே ராணுவத்தின் போர் ரகசியம் இந்த அளவுக்கு அம்பலமானது இதுவே முதல் முறை. இராக் போரில் 1,09,032 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பொதுமக்கள் 66,081, ஊடுருவல்காரர்கள் 23,984, இராக் ராணுவத்தினர் 15,196, கூட்டுப் படை வீரர்கள் 3,771 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொத்தம் 3,92,000 ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
விக்கிலீக்ஸ் இணையதள தகவல் வெளியீட்டால் அமெரிக்க ராணுவத்துக்கு ஏற்பட்டுள்ள அவப் பெயர், தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆராய ஒரு குழுவை பென்டகன் நியமித்துள்ளது என்று பென்டகன் பத்திரிகை தொடர்பு அதிகாரி ஜெஃப் மாரெல் தெரிவித்தார்.
அச்சுறுத்தல் அதிகமுள்ள 300 இராக்கியர்களை அமெரிக்க ராணுவம் கண்டறிந்துள்ளது. ஆனால் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
போர் குற்றத்துக்கான நிர்பந்தங்கள் குறித்த கள அறிக்கையில் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப்படைகளும் இராக் அரசும் எந்த அளவுக்கு வரம்பு மீறியுள்ளன என்பது புரியும் என்று விக்கிலீக்ஸ் இணையதள தலைமை ஆசிரியர் ஜூலியன் அஸôஞ்ஜ் குறிப்பிட்டுள்ளார்.
அடிப்பது, தீயிட்டு கொளுத்துவது, சவுக்கால் அடிப்பது உள்ளிட்ட கொடுமையான வன்முறைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆப்கானிஸ்தான் தொடர்பான 92 ஆயிரம் ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இம்முறை விக்கிலீக்ஸ் இணையதளத்தின் ஆவணங்கள் நியூயார்க் டைம்ஸ், தி கார்டியன், லெ மோன்டே, அல் ஜஸீரா, டெர் ஸ்பெகல் ஆகிய ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
நியூயார்க் டைம்ஸ் நாளேட்டில் சிறப்புப் பேட்டியில் ஜெஃப் மாரெல் கூறியிருப்பது: தனிநபரும் சட்டத்தை மீறலாம் என்பதற்கு விக்கிலீக்ஸ் வழிவகை செய்துள்ளது. ரகசிய தகவல்களை உலகிற்கு வெளியிட்டதோடு, இவை எதிரிகள் கையில் கிடைக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் குறித்து விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்களை அங்குள்ள பயங்கரவாதிகள் ஆராய்ந்து வருகின்றனர். அதன் மூலம் ரகசியங்களை அறிந்து ராணுவத்துக்கு எதிராக அவர்கள் செயல்பட வழியேற்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இத்துடன் இராக்கில் உள்ள கூட்டுப் படைக்கும் இது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2006-ம் ஆண்டு டிசம்பரில்தான் மிக அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரே மாதத்தில் 3,800 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஷியா-சன்னி முஸ்லிம் இனத்தவரிடையே மோதல் ஏற்பட்டபோது ராணுவம் ஷியா பிரிவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
சில சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அமெரிக்க ஹெலிகாப்டரை வீழ்த்திய நிகழ்வுகளும் நடந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

16 அக்டோபர், 2010

தமிழா உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு” - முகவரியில்லா துண்டு பிரசுரம் வினியோகம்

 பல பகுதிகளில் ”இன்றைய தமிழகம்'” என்ற தலைப்பில் ”மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி” என்ற பெயரில் முகவரியில்லா துண்டுப்பிரசுரம் கடந்த சில தினங்களாக மர்ம ஆசாமிகளால் வினியோகிப்பட்டு வருகின்றது.
"ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?' "நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்?' அவர் சிரித்தபடி சொன்னார், "என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன்!'
"என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்? மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம். தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கை யிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!'
"இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!' இவ்வாறு அத்துண்டுப்பிரசுரத்தில் அச்சிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே எதிர்கட்சிகள் தமிழக அரசின் இலவச திட்டங்கள் குறித்து கடுமையாக சாடி வருகின்றன. இலவச திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக அளித்தே கடந்த தேர்தலில் தி.மு.க. ஆட்சியை பிடித்தது என்று அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தி வந்தன. இது தவிர, ஒரு சில திரைப்படங்களில் கூட இலவச திட்டங்களை கேலி செய்து நகைச்சுவை காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. பத்திரிக்கைகளிலும் இணைய தளங்களிலும் பல்வேறு கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தன. இவ்வாறிருக்கையில், இந்த துண்டுப்பிரசுர வினியோகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

7 அக்டோபர், 2010

பாபர் மசூதி தீர்ப்பு - சீதையின் சமையலறையில் கருகிய நீதி

பாபர் மஸ்ஜித் உரிமை குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி நடுநிலையாளர்களுக்கும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின்படி சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய நீதிபதிகள், ஒரு சாராரின் நம்பிக்கையை மட்டும் நிலைநாட்டியுள்ளமை உலக அரங்கில் இந்திய நீதிமுறையின் லட்சணத்தைக் கேலிக்கூத்தாக்கி உள்ளது!
நான்கரை நூற்றாண்டுகள் அனுபவ பாத்தியதையுள்ள பாபர் மசூதியை 1992, டிசம்பர் 6 அன்று சங்பரிவாரங்கள் வன்முறையாக ஆக்கிரமித்து இடித்துத் தகர்த்தனர். ஒருவரின் சொத்தை ஆக்கிரமிப்பதும், அவர் உடமைக்குச் சேதம் விளைவிப்பதும் சட்டவிரோதம். இதனைத்தொடர்ந்து மதக்கலவரங்களால் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களைக் கொன்று குவித்தது அதைவிடக்கொடிய கிரிமினல் குற்றம்.

இதற்கெல்லாம் காரணமானவர்களை விசாரித்துத் தண்டிக்க முயற்சி எடுக்காத நீதிமன்றங்கள், பாபர் மசூதி உரிமை குறித்த வழக்கில் வழங்கியுள்ள தீர்ப்பு தேசிய ஒருமைப்பாட்டிற்கு வேட்டுவைக்கும் என்பதோடு மக்களுக்கு இருக்கும் சட்டத்தின் மீதான நம்பிக்கையையும் தகர்க்கக்கூடியதாக அமைந்துள்ளது. சட்டப்படியல்லாத இத்தீர்ப்பு(கட்டப்பஞ்சாயத்து), ஏற்கனவே ராமர் பெயரால் முடக்கி வைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் சேதுக்கால்வாய் திட்டத்தையும் இதே நம்பிக்கையின் அடிப்படையில் நிரந்தரமாக முடக்கி வைக்க வழிகோலும்.
கடந்த 24-09-2010 அன்று வெளியாக இருந்த தீர்ப்பு, உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட மனுவின் மீது இடைக்காலத்தடையாணை பெறப்பட்டு 6 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக, உச்ச நீதிமன்றத்தால் அப்புகார் மனு தள்ளுபடி செய்யப்பட, கடந்த 30-09-2010 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் இம்முறையற்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பு வெளியாவதற்கு முன்னர், பாபர் மசூதி நிலம் யாருக்குச் சொந்தம் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம் என்றும் அதில் நீதிமன்றங்களால் தீர்ப்பு கூற இயலாது என்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் சங்பரிவாரங்கள் அறிவித்திருந்தன. எனினும் பொதுஅமைதிக்கு ஊறு விளைவிப்பவர்களை முன்கூட்டியே கைது செய்து சிறையிலடைக்கும் "குண்டர் தடுப்புச் சட்டம்", தீர்ப்பு வெளியாகும் சமயம் சங்பரிவாரங்கள் மீது பாயவில்லை. இதனால் சங்பரிவாரங்களில் குண்டர்களே இல்லை என்பது அர்த்தம் அல்ல என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் நன்றாகத் தெரியும். சுதந்திர, குடியரசு தினங்களுக்கு முன்னரும் ஒவ்வொரு டிசம்பர் 6 க்கு முன்னரும் சந்தேகத்தின்பேரிலும் பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரிலும் முஸ்லிம்களைக் கைது செய்யும் சட்டம், நாட்டில் திட்டமிட்டே கலவரம் உருவாக்கிக் கொண்டிருக்கும் சங்பரிவாரங்களை இத்தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு சந்தேகிக்கவோ முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கூட கைது செய்யவோ முன்வரவில்லை!
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒப்புக்குத்தான்; உண்மையான தீர்ப்பு உச்ச நீதிமன்றம் வழங்குவதுதான் என்றும், இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம் என்றும் சமாதானம் சொல்லப்படுகிறது. ஒன்றுக்கும் உதவாத தீர்ப்புக்கு ஏன் 60 ஆண்டுகால தாமதம் என்ற கேள்விக்கு யாரிடம் பதில் பெறுவது? தாமதமாக வழங்கப்படும் நீதிகூட அநீதியே என்று கருதப்படும் போது முஸ்லிம்களின் உடமை விசயத்தில் 60 ஆண்டுகள் தாமதப்படுத்தி அலகாபாத் நீதிமன்றம் அநீதி வழங்கியுள்ளது!

24-09-2010 வரை எந்த நீதிமன்றத் தீர்ப்பும் எங்களைக் கட்டுப்படுத்தாது என்று சொல்லிவந்த சங்பரிவாரங்கள் 30-09-2010 தேதியிட்ட தீர்ப்பைத் தலையில் வைத்துக் கொண்டாடுவதிலிருந்தே இதன் லட்சணம் விளங்குகிறது. தீர்ப்பு எப்படி இருப்பினும் "மேல்முறையீடு செய்வது உறுதி" என்ற அத்வானிக்கும் செலக்டிவ் அம்னீஸியா என்று நினைக்குமளவு தீர்ப்பை வரவேற்றுள்ளார். மூன்றில் இருபங்கு உரிமையைப் பெற்றுள்ளபோதும் "இந்துக்கள்" அமைதி காக்க வேண்டும் என்று RSS தலைவர் வேண்டுகோள் வைக்கிறார்! யாரை ஏமாற்ற இந்தக் கபட நாடகங்கள்!

செப்டம்பர் 24 -30 க்கு இடைப்பட்ட ஆறுநாட்களில் என்ன நடந்தது? சட்டம் எங்களைக் கட்டுப்படுத்தாது என்று முழங்கிய சங்பரிவாரங்கள் மகுடிப் பாம்பாய் சட்டத்திற்குக் கட்டுப்பட்ட அதிசயம் எப்படி நிகழ்ந்தது? என்ற கேள்விகளுக்கு விடைதேட அலைய வேண்டியதில்லை. சட்டமாவது மண்ணாங்கட்டியாவது என்பது சங்பரிவாரங்களின் இயல்பெனில், நீதியாவது மண்ணாங்கட்டியாவது என்று காங்கிரஸும் நடந்து கொண்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும்கூட நியாயமான தீர்ப்பை உடனடியாக எதிர்பார்க்க முடியாதளவுக்கு நம்நாட்டு சட்டத்தின் ஓட்டைகள் பல்லிளிக்கின்றன. காஞ்சி சங்கராச்சாரியாருக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்க முடியாதளவு 'பக்தி'முற்றிப்போன நீதிபதிகளும், லவ் ஜிஹாத், இஸ்லாமிய தீவிரவாதம் என்றெல்லாம் வெளிப்படையாகவே விஷம்கக்கிய காவியுடை தரிக்காத நீதிபதிகளும் நம் நாட்டு நீதிமன்றங்களில் உள்ளதை நினைவில் கொள்ளவும்.

பாபர் மசூதி நடுவில்தான் ராமன் பிறந்தான் என்று இரு நீதிபதிகள் கூறியுள்ளனர். இன்னொரு நீதிபதியோ, பாபர் மசூதி கோவிலை இடித்துக் கட்டப்பட்டதல்ல என்கிறார். இடிக்கப்படாத கோவிலில் முஸ்லிம்கள் தொழமாட்டார்கள் என்று தன் பங்குக்கு இன்னொரு நீதிபதி குழப்புகிறார். 1949 வரை முஸ்லிம்கள் அங்கு தொழுது வந்துள்ளதால் அங்கு கோவில் இருந்திருக்கவில்லை என்றுதானே அர்த்தமாகும்!

RAமர் பிறந்ததாக நீதிபதிகளால் சொல்லப்பட்டுள்ள (சங்பரிவாரங்களும் இதையேதான் சொல்லி வருகிறார்கள்) இடம் இந்துக்களுக்கு உரியதாம்! அதாவது சிலைகளை வணங்காத முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலத்தின் நடுவில் இந்துக்கடவுளின் உருவச்சிலை! என்னே ஒரு வக்கிரம் பாருங்கள்! அயோத்தியில் பிறந்ததாக எவ்வித ஆதாரங்களும் இன்றி 'நம்ப'ப்படும் ராமன், பாபர் மசூதிக்குச் சற்று தள்ளி பிறந்ததாக 'நம்பி'னால் குடியா மூழ்கி விடும்?
பாபர்மசூதி, ராமர் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதல்ல என்ற நீதிபதி கான் அவர்களின் தீர்ப்பை கருத்தில் கொண்டாலே போதும், சங்பரிவாரங்களின் ஐம்பதாண்டுகால மோசடிகள் முடிவுக்கு வந்துவிடும். ஏனெனில் இதுவரை ராமன் பிறந்த இடத்தில் கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டுள்ளது என்பதே பரிவாரங்களின் நம்பிக்கை. தீர்ப்பை ஏற்றுக்கொண்ட சங்பரிவாரங்கள் இதையும் ஏற்றுதானே ஆகவேண்டும்! ஆனால் ஏற்பார்களா?
மொத்ததில் மூன்று நீதிபதிகளும் வழங்கிய தீர்ப்பில் நீதி நிலைநாட்டப்பட வில்லை. ஒரு சாராருக்கு இழைக்கப்பட்ட அநீதி, இன்னொரு சாராருக்கான நீதியாகக்கருத முடியாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மென்மேலும் பாதிப்பை ஏற்படுத்துவதை ஒருபோதும் நீதியான தீர்ப்பாகக் கருத முடியாது. இனிமேல் எந்த ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்று இந்திய முஸ்லிம்கள் நம்பிக்கை இழக்கும்முன்னதாக, சட்டம் கடமையைச் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் வாய்மையே வெல்லும் என்பதெல்லாம் வெறும் வார்த்தை ஜாலம்தான்!

விஷம கேள்விக்கு அறிவான வணங்காமுடி பதில்!

பாபர் மசூதி ஒன்றும் புனிதத்தலம் கிடையாதுதானே. இந்திய முஸ்லிம்களுக்கு மேலும் இழப்பு ஏற்படாமல் இருக்க வேண்டி அவர்கள் விட்டுக் கொடுத்தால் என்னவாம்? - ஜோதி, குத்தாலம்
பாபர்மசூதி புனிதத் தலமா இல்லையா என்பதை முஸ்லிம்கள் முடிவு செய்து கொள்வார்கள். ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்களின் வழிபாட்டுத்தலம் புனிதம்தான்.
முஸ்லிம்களுக்கு மேலும் இழப்பு ஏற்படாமல் இருக்க" என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது, பால்தாக்கரே, நரேந்திரமோடி ஸ்டைலில் உருவாகும் இழப்பா?
விட்டுக்கொடுப்பதா அல்லது போராடி மீட்பதா என்பது வழக்கில் தொடர்புடையவர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம்.
நமது தளத்தில் "ரஸ்ஸல் எழுதிய அலசலி"ல் சொல்லியுள்ளபடி, முஸ்லிகளுக்கு விட்டுக்கொடுத்து இந்துக்களின் பெருமையை உலகுக்கு உணர்த்தலாமே?