என்னை தொட்டவர்கள் !

24 அக்டோபர், 2010

இராக் போரில் 66 ஆயிரம் பொதுமக்கள் பலி: விக்கிலீக்ஸ் அதிர்ச்சி தகவல்

நியூயார்க்/வாஷிங்டன், அக்.23: இராக் போரில் 66 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட அதிர்ச்சித் தகவலை "விக்கிலீக்ஸ்' இணையதளம் வெளியிட்டுள்ளது.
இராக் போர் குறித்து 4 லட்சம் ஆவணங்களை திங்கள்கிழமை வெளியிடப் போவதாக "விக்கிலீக்ஸ்' ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த ஆவணங்கள் வெளியானால் பொதுமக்களுக்கும் இராக்கில் உள்ள பன்னாட்டு வீரர்களின் உயிருக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று பென்டகனில் பன்னாட்டுப் படைகளின் (நேட்டோ) தலைவர் ஆண்டர்ஸ் ஃபாக்ஸ்ராஸ்முùஸன் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் 4 லட்சம் ஆவணங்களின் முக்கிய தகவல்களை "நியூயார்க் டைம்ஸ்' நாளேடு சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.
இராக் போரின்போது நடத்தப்பட்ட கொடுமைகள், சித்திரவதைகள் ஆகியன ஆவணங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன. 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான சம்பவங்கள் அனைத்தும் இதில் இடம்பெற்றுள்ளன. இராக்கில் உள்ள பொதுமக்களில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்தும், இராக் ராணுவத்துக்கு ஈரான் எந்த வகையில் உதவியது என்பதும் இராக் ராணுவ மற்றும் போலீஸôரின் செயல்பாடு குறித்தும் டைம்ஸ் நாளேட்டில் தகவல் வெளியாகியுள்ளது.
உலகிலேயே ராணுவத்தின் போர் ரகசியம் இந்த அளவுக்கு அம்பலமானது இதுவே முதல் முறை. இராக் போரில் 1,09,032 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பொதுமக்கள் 66,081, ஊடுருவல்காரர்கள் 23,984, இராக் ராணுவத்தினர் 15,196, கூட்டுப் படை வீரர்கள் 3,771 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொத்தம் 3,92,000 ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
விக்கிலீக்ஸ் இணையதள தகவல் வெளியீட்டால் அமெரிக்க ராணுவத்துக்கு ஏற்பட்டுள்ள அவப் பெயர், தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆராய ஒரு குழுவை பென்டகன் நியமித்துள்ளது என்று பென்டகன் பத்திரிகை தொடர்பு அதிகாரி ஜெஃப் மாரெல் தெரிவித்தார்.
அச்சுறுத்தல் அதிகமுள்ள 300 இராக்கியர்களை அமெரிக்க ராணுவம் கண்டறிந்துள்ளது. ஆனால் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
போர் குற்றத்துக்கான நிர்பந்தங்கள் குறித்த கள அறிக்கையில் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப்படைகளும் இராக் அரசும் எந்த அளவுக்கு வரம்பு மீறியுள்ளன என்பது புரியும் என்று விக்கிலீக்ஸ் இணையதள தலைமை ஆசிரியர் ஜூலியன் அஸôஞ்ஜ் குறிப்பிட்டுள்ளார்.
அடிப்பது, தீயிட்டு கொளுத்துவது, சவுக்கால் அடிப்பது உள்ளிட்ட கொடுமையான வன்முறைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆப்கானிஸ்தான் தொடர்பான 92 ஆயிரம் ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இம்முறை விக்கிலீக்ஸ் இணையதளத்தின் ஆவணங்கள் நியூயார்க் டைம்ஸ், தி கார்டியன், லெ மோன்டே, அல் ஜஸீரா, டெர் ஸ்பெகல் ஆகிய ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
நியூயார்க் டைம்ஸ் நாளேட்டில் சிறப்புப் பேட்டியில் ஜெஃப் மாரெல் கூறியிருப்பது: தனிநபரும் சட்டத்தை மீறலாம் என்பதற்கு விக்கிலீக்ஸ் வழிவகை செய்துள்ளது. ரகசிய தகவல்களை உலகிற்கு வெளியிட்டதோடு, இவை எதிரிகள் கையில் கிடைக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் குறித்து விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்களை அங்குள்ள பயங்கரவாதிகள் ஆராய்ந்து வருகின்றனர். அதன் மூலம் ரகசியங்களை அறிந்து ராணுவத்துக்கு எதிராக அவர்கள் செயல்பட வழியேற்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இத்துடன் இராக்கில் உள்ள கூட்டுப் படைக்கும் இது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2006-ம் ஆண்டு டிசம்பரில்தான் மிக அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரே மாதத்தில் 3,800 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஷியா-சன்னி முஸ்லிம் இனத்தவரிடையே மோதல் ஏற்பட்டபோது ராணுவம் ஷியா பிரிவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
சில சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அமெரிக்க ஹெலிகாப்டரை வீழ்த்திய நிகழ்வுகளும் நடந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.