என்னை தொட்டவர்கள் !

18 ஏப்ரல், 2012

அமெரிக்க முஸ்லிம்கள் பயங்கரவாதிகளா?


நிவ்யோர்க்: அமெரிக்காவின் பிரதான நகரங்கள் மூன்றில் வாழும் முஸ்லிம்களுடைய அன்றாடச் சுமுக வாழ்வு கேள்விக்குறியாகும் நிலை தற்போது தோன்றியிருப்பதாக சமூகச் செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நிவ்யோர்க், நிவ் ஜேர்ஸி, நிவ் ஓர்லீன்ஸ் ஆகிய நகரங்களில் உள்ள மசூதிகள், உணவகங்கள், புத்தகக் கடைகள் முதல் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் வரை அமெரிக்க முஸ்லிம்கள் நிவ்யோர்க் காவல்துறையினரின் அதிதீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
தம்முடைய மத நம்பிக்கையை மட்டும் அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த இன ஒதுக்கல்நடவடிக்கை, அங்கு வாழும் முஸ்லிம்களின் ஆத்திரத்தைக் கிளறியுள்ள நிலையில், "நிவ்யோர்க் நகரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதான தீவிரக் கண்காணிப்பு இன்றியமையாததாகும்" என நகர மேயர் மைக்கேல் ப்ளூம்பேர்க், காவல்துறை ஆணையர் ரே கெல்லி ஆகியோர் குறிப்பிட்டுள்ளமை மிகப் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
"பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளல் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுமத்தை குற்றவாளிக் கண்ணோட்டத்தோடு நோக்குதல் என்பது மனித உரிமை மீறலாகும். குறித்த சமூகத்தினர் இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இத்தகைய சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகள் சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவையும் பரஸ்பர புரிந்துணர்வையும் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக, வெறுப்பையும் துவேஷத்தையுமே வளர்க்கும் என்பதோடு, எதிர்மறை விளைவுகளைத் தோற்றுவிக்கும் சாத்தியக்கூறுகளும் இதில் உள்ளன" என நிவ்யோர்க் நகர காவல்துறையினரின் தூரநோக்கற்ற செயல்பாடுகளைச் சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஏனைய நகரங்கள் சிலவற்றில் உள்ள காவல்துறை அதிகாரிகள், நிவ்யோர்க் காவல்துறையினரின் தூரநோக்கற்ற செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சிக்காகோ நகர மேயர் ரஹ்ம் இம்மானுவேல்,"நிவ்யோர்க் நகரில் உள்ளது போல சிக்காகோ நகரில் முஸ்லிம் மக்களைப் புண்படுத்தும் வகையிலான இத்தகைய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை" என அழுத்தம் திருத்தமாகக் கருத்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
"பயங்கரவாதத்துக்கு எதிரான முன்னெடுப்புக்களில் நம்மோடு சேர்ந்து பங்களிப்புச் செய்ய முஸ்லிம் மக்கள்தாம் மிகச் சிறந்த துணைவர்கள். எனவே, பயங்கரவாதத்தைத் தடுக்க முயற்சிக்கிறோம் என்ற பெயரில் அமெரிக்கப் பிரஜைகளான முஸ்லிம் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகளைச் சீர்குலைப்பதில் நமக்கு உடன்பாடில்லை" என லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறையின் துணைத் தலைவர் மைக்கல் டொவ்னிங் வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளின் பொருட்டு அமர்த்தப்பட்டுள்ள 1000 அதிரடிக் காவல்துறையினரின் குடியிருப்புத் திட்டம், அமெரிக்க மக்கள்மீது வருடாந்தம் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரிச்சுமையை ஏற்றியுள்ளது.
இந்நிலையில், முஸ்லிம் மக்களுக்கு எதிரான நிவ்யோர்க் நகரக் காவல்துறையினரின் இன ஒதுக்கல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பல்வேறு பேரணிகள், கருத்தரங்குகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றன. நகர மேயர் வருடாந்தம் ஒழுங்குசெய்யும் மத நல்லிணக்க விருந்துபசார வைபவத்தில் கலந்துகொள்வதை முஸ்லிம் தலைவர்கள் பகிஷ்கரித்துள்ளனர். அமெரிக்காவின் மனித உரிமை அமைப்புக்களும் இவ்விடயம் தொடர்பில் தமது அழுத்தமான கண்டனத்தைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எந்தவித இன, மத வேறுபாடுகளுக்கும் அப்பால் அனைவரும் அமெரிக்கர்களே என்ற வகையில் சமத்துவமாகவும், சுயகௌரவத்துடனும் நடத்தப்படுவதன் மூலமே அமெரிக்கப் பாதுகாப்பைப் பலப்படுத்த முடியும் என்பது சமூகச் செயற்பாட்டாளர்களின் உறுதியான நம்பிக்கையாக உள்ளது.