என்னை தொட்டவர்கள் !

22 அக்டோபர், 2011

கடாபி சுட்டுக் கொலை: மேற்கத்திய நாடுகள் வரவேற்பு


ரோம்,அக்.22 - லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மர் கடாபி சுட்டுக்கொலை செய்யப்பட்டதை மேற்கத்திய நாடுகள் வரவேற்றுள்ளன. லிபியாவில் 42 ஆண்டுகள் அதிபராக இருந்த மும்பர் கடாபி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பதவியை துறந்து தலைமறைவானார். அவர்,வெளிநாட்டிற்கு தப்பியோடி இருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் அவர் தனது சொந்த நகரான சிர்டேவில் மறைந்திருப்பது தெரியவந்தது. அவரை எதிர்ப்பாளர்கள் சுட்டனர். உடனே அருகில் இருந்து குழாய்க்குள் ஓடி ஒளிந்தார். அப்போதும் அவரை எதிர்ப்பாளர்கள் சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த கடாபி மரணமடைந்தார். அவரது உடலை எதிர்ப்பாளர்கள் தூக்கிச்சென்றுவிட்டனர். 
முன்னாள் அதிபர் கடாபி சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு மேற்கத்திய நாடுகள் வரவேற்றுள்ளன. கடாபியின் மரணமானது சர்வாதிகாரம், பாஷிச ஆட்சி முறை,ஏதேச்சதிகாரம் ஆகியவைகளுக்கு முடிவு ஏற்பட்டுள்ளதோடு வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் போர் முடிவுக்கும் வந்துள்ளது என்று கூறியுள்ளனர். கடாபி கொல்லப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதின் மூலம் லிபியாவில் சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது என்று அந்த நாட்டு தற்காலிக ஆட்சிமன்ற குழு கருத்து தெரிவித்துள்ளது. கடாபி சுட்டுக்கொலை செய்யப்பட்டதின்மூலம் லிபியாவில் போர் முடிவுக்கு வந்துள்ளது என்று இத்தாலி நாட்டு பிரதமர் சல்வியோ பெர்லுஸ்கோனி கருத்து தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் இத்தாலியின் காலனி நாடாக லிபியா இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடாபி கொல்லப்பட்டதன் மூலம் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது என்று மேற்கத்திய நாடுகள் இடம் பெற்றுள்ள ஐரோப்பா யூனியன் தெரிவித்துள்ளது. கடாபி கொல்லப்பட்டதின் மூலம் லிபியாவில் முதல் கட்ட புரட்சி முடிவுக்கு வந்துள்ளது என்று அமெரிக்காவின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர் ஜான் மிக்சியன் கூறியுள்ளார்.