என்னை தொட்டவர்கள் !

11 ஜூன், 2010

இந்தியா வெட்கப்பட வேண்டும்

எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை நமது லட்சியமாகக் காட்டும் இன்றைய இந்திய ஆட்சியாளர்கள், அமெரிக்கா தனது தேசத்தையும், தேசமக்களையும் மட்டுமே முன்னிறுத்திச் செயல்படுவதை ஏன் முன்னுதாரணமாகக் கொள்ள மறுக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. இந்தியாவின் இறையாண்மையும், தன்மானமும் சின்னச்சின்ன விஷயங்களில்கூடப் பேரம் பேசப்பட்டுவிடும்போது, அதிர்ச்சி அடைவதைத் தவிர நமக்கு வழிதான் என்ன இருக்கிறது. கோத்ராவைத் தொடர்ந்து நடைபெற்ற மதக்கலவரத்தை அவர் கட்டுப்படுத்தவில்லை என்பதும், கண்களை மூடிக் கலவரம் காட்டுத்தீயாகப் படர்வதை அனுமதித்தார் என்பதும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிமீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள். 2002-ம் ஆண்டில் நடந்த குஜராத் கலவரங்களின் பின்னணியில், மனித உரிமை மீறல் என்கிற காரணம் காட்டி அவருக்கு அமெரிக்க அரசு நுழைவு அனுமதி மறுத்துவிட்டது. அமெரிக்கா மட்டுமல்ல, கனடா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளும் அவர் தங்களது தேசத்துக்கு விஜயம் செய்ய அனுமதி மறுத்தன. மனித உரிமை மீறல் நடந்ததாகக் கூறப்படுவது இந்தியாவில். சம்பந்தப்பட்ட நபரோ, இந்தியாவின் முக்கியமான ஒரு மாநிலத்தின் முதல்வர். ஆனால், அவர்களது நாட்டுச் சட்டப்படி, மனித உரிமை மீறலாகக் கருதப்படுவதைச் செய்த ஒருவர் தங்களது தேசத்துக்கு விஜயம் செய்வதை அந்த நாடுகள் விரும்பவில்லை. இந்தியாவைப் பகைத்துக் கொள்வோம் என்று பயப்படவில்லை. தயவுதாட்சண்யம் பார்க்கவில்லை. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அமெரிக்காவுக்கு சொற்பொழிவாற்ற, அந்த நாட்டுப் பல்கலைக்கழகங்களின் அழைப்பை ஏற்றுக் கொள்கிறார். ஆனால், அமெரிக்க விமானத்தில் ஏறுவதற்கு எல்லா பயணிகளையும்போல அவரும் சோதனைக்கு உள்படுத்தப்படுகிறார். எந்தப் பிரமுகரானாலும் விதிவிலக்கில்லை என்று கூறிவிடுகிறார்கள். இது எங்கள் தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்று விளக்கம் தருகிறார்கள். தயவுதாட்சண்யத்தையும், மரியாதையையும்விடத் தங்களது தேசப் பாதுகாப்புதான் அவர்களுக்கு முக்கியம். பிரபல இந்தி நடிகர் ஷாரூக்கானும் இதேபோன்ற சோதனையை எதிர்கொள்ள நேர்ந்தது உலகறிந்த செய்தி. இங்கே இந்தியாவில் என்ன நடக்கிறது? இலங்கை அதிபர் ராஜபட்ச அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார். வரும்போது தன்னுடைய குழுவில் தைரியமாக இந்தியாவில் குற்றவாளியாகத் தேடப்படும் ஒருவரை, அமைச்சர் என்கிற அந்தஸ்துடன் அழைத்து வருகிறார். அவரைப் பிரதமருக்கு அறிமுகப்படுத்தி, கைகுலுக்க வைக்கிறார். என்னருகில், எனது நிழலில் இருந்தால் உன்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்று உறுதி அளித்தாரோ என்னவோ, யாருக்குத் தெரியும்? அதிபர் ராஜபட்சவுடன் வரும் குழுவில் இடம்பெறப் போகிறவர்கள் யார், எவர்? அவர்களது பின்னணிதான் என்ன? இவையெல்லாம் தெரியாமல் அனுமதி வழங்கப்பட்டதா? இந்தியாவிலிருந்து பிரதமருடன் வெளிநாடு செல்லும் அவரது தனிச்செயலர், பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட அனைவருமே முழுமையாக விசாரிக்கப்பட்ட பிறகுதான் பிரதமர் விஜயம் செய்யும் நாடுகளில் நுழைவு அனுமதி வழங்கப்படுகிறது. பிரதமரைத் தவிர, அனைவருமே சோதனை செய்யப்படுகிறார்கள். அப்படியானால், இந்தியப் பிரதமரைவிட இலங்கை அதிபர் சக்தி வாய்ந்தவரா? இந்தியா என்ன இலங்கையின் அடிமை நாடா அல்லது நாம் அதிபர் ராஜபட்சவை அண்டிப் பிழைக்கிறோமா? இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருந்த இலங்கையின் கலாசாரம் மற்றும் சிறுதொழில் வளர்ச்சித் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்மீது இந்திய நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் என்னென்ன தெரியுமா? 9 பேர் கொண்ட கூட்டத்துடன் டக்ளஸ் தேவானந்தா 1986-ல் சென்னை சூளைமேட்டில் சாலையில் போவோர் வருவோர்மீது கண்மூடித்தனமாகச் சுட்டு 5 பேர் காயமடைந்தனர். அதில் ஒருவர் உயிரிழந்தார், அந்த வழக்கில் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி. 1989-ல் பணத்துக்காக சிறுவன் ஒருவனைக் கடத்திய வழக்கும் இவர்மீது நிலுவையில் உள்ளது. இந்த விவரங்கள் எதுவும் தெரியாமல், விசாரிக்காமல் அவருக்கு இந்திய அரசு அனுமதி வழங்கியதா? ஏன் வழங்கியது? தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவரை மாஜிஸ்திரேட் உத்தரவில்லாமல், வாரண்ட் இல்லாமல் பார்த்த உடனேயே கைது செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு உண்டே! ஏன் செய்யவில்லை? அப்படியானால் இது அரசுக்கே தெரிந்து நடந்த ஒரு நிகழ்வே தவிர எதிர்பாராத ஒன்று என்று ஏற்றுக் கொள்வதற்கில்லை. இதுவரை குவாத்ரோச்சி போன்ற தேடப்படும் குற்றவாளிகளைத் தப்ப அனுமதித்த குற்றமும், வெளிநாடுகளிலிருந்து கைதுசெய்து அழைத்து வராத குற்றமும்தான் நமது அரசு செய்து வந்தது. இப்போது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்கள் அரசுமுறை விருந்தினர்களாக வரவேற்கப்படவும் அனுமதி அளிக்கத் தொடங்கிவிட்டிருக்கிறது இந்திய அரசு. விரைவிலேயே குவாத்ரோச்சி இத்தாலி நாட்டின் அமைச்சராகி விட்டால், அரசுமுறைப் பயணமாக அவர் தைரியமாக, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் வந்து போகலாம் போலிருக்கிறது. போபால் விஷவாயுக் கசிவு வழக்கின் முதல் குற்றவாளி வாரன்ட் ஆண்டர்சன்கூட, அதிபர் ஒபாமாவுடன் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்து போனாலும் ஆச்சரியமில்லை. மனதை ஒரு கேள்வி நெருடுகிறது. 1987-ம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான கையோடு இலங்கை அதிபர் ஜெயவர்த்தனவின் முன்னிலையில் கடற்படை அணிவகுப்பைப் பார்வையிடும்போது நமது இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை ஒரு கடற்படை வீரர் துப்பாக்கியால் தாக்கிக் கொல்ல முற்பட்டாரே, நினைவிருக்கிறதா? அந்த 26-வயது விஜயமுனிகே ரோகணா என்கிற கடற்படை வீரரின் தாக்குதலால் ராஜீவ் காந்தி அன்று கொல்லப்பட்டு, இப்போது அதே ரோகணா ஓர் அமைச்சராக அதிபர் ராஜபட்சவுடன் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருந்தால், நமது இந்திய அரசு அவரை வரவேற்றிருக்குமா? பிரதமர் ரோகணாவுடன் கைகுலுக்கி மகிழ்ந்திருப்பாரா? சூளைமேட்டில் டக்ளஸ் தேவானந்தாவின் குண்டுகளுக்குப் பலியான அந்த முகம் தெரியாத இந்தியக் குடிமகனுக்கு நமது அரசு தரும் மரியாதை இதுதானா? ஓர் இந்தியக் குடிமகனைக் கொலை செய்த குற்றத்துக்காகக் கைவிலங்கு மாட்டப்பட வேண்டிய ஒரு நபருடன் கைகுலுக்கப் பிரதமருக்கு எப்படி மனம் வந்தது? நூறு கோடிக்கும் அதிகமான மக்களின் நம்பிக்கை தகர்கிறதே... வெட்கக் கேடு!(dinamani)