என்னை தொட்டவர்கள் !

6 நவம்பர், 2010

சபாஷ் மும்பை போலிஷ்!

மும்பை : 70களிலும் 80களிலும் அமெரிக்கா சொல்வதை எல்லாம் வியப்போடு பார்த்து கொண்டிருந்த காலம் மலையேறி விட்டது என்பதை உணர்த்துவது போல் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மும்பை வருகையையொட்டி பாதுகாப்பு விஷயங்களில் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கேட்ட மாற்றங்களை செய்து கொடுக்க மும்பை காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
எப்போதும் அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு படையே தலைமையேற்று செயல்படுத்துவது வழக்கம். ஆனால் அதை ஏற்க மறுத்த மும்பை காவல்துறை ஒபாமாவின் பாதுகாப்பு விஷயங்களை தாங்கள் பொறுப்பேற்று கொள்வதாக சொன்னதோடு ஒபாமாவின் பாதுகாப்பு அதிகாரிகள் அமெரிக்காவிலிருந்து துப்பாக்கிகளை இறக்குமதி செய்து கொள்ள அனுமதி மறுத்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநில அதிகாரிகளுடன் வெள்ளை மாநில அதிகாரிகள் தங்கள் அதிபர் வருகையின் போது வழமையான பாதுகாப்பு ஏற்பாடுகளில் கொஞ்சம் நெளிவு சுளிவோடு நடந்து கொள்வதற்காக இது வரை ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை மும்பை காவல்துறை ஏற்க மறுத்துள்ளது.
ஒபாமாவுடன் வரும் 3000 நபர்களுக்கும் சுங்க சோதனையில் சலுகை காட்டுமாறு கோரப்பட்டதாகவும் ஆனால் அனைவருக்கும் வழமையாய் செய்ய வேண்டிய எழுத்து வேலைகளை செய்யாமல் அனுமதிக்க முடியாது என்றும் சொல்லப்பட்டதாகவும் மும்பை காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விழாக்களின் உள்ளே நுழைவது , வெளியேறுவது போன்றவற்றை கட்டுபடுத்துவதும் மும்பை காவல்துறையின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என தெரிகின்றது.ஒபாமாவின் அந்தரங்க பாதுகாவலர்கள் தவிர மற்ற அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் ஆயுதம் ஏந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் மும்பை நகர காவல்துறையே இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்ததாகவும் இருக்கும் என்றும் தெரிகிறது. ஒபாமா மணி பவனுக்கு வருகை தரும் போது அருகிலுள்ள கட்டிடங்களில் இருந்து புகைப்படம் எடுக்க கூடாது என்ற கோரிக்கையை நிராகரித்துள்ள மும்பை காவல்துறை ஜனநாயக நாட்டில் ஏகப்பட்ட கெடுபிடிகளை விதிக்க முடியாது என்று சொன்னதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.